தமிழகம்

‘கோட்டை’ மாவட்ட ‘அறம்’ தொகுதி சலசலப்பு | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

‘கோட்டை’ மாவட்டத்தின் ‘அறம்’ தொகுதியில் இம்முறை கதர் பார்டிக்கு சீட் கொடுக்கக் கூடாது என சூரியக் கட்சியின் ‘உதயப்’ புள்ளி தொடக்கம் முதலே போர்க்கொடி தூக்கி வந்தார். தலைவர் நடத்திய நேர்காணலின் போது இது தொடர்பாக 20 பேர் பேசினார்கள்.

இருந்த போதும் “நான் மீண்டும் அதிகாரத்துக்கு வரவேண்டுமானால் தலைமை நிறுத்தும் வேட்பாளரை ஜெயிக்க வையுங்கள்” என தலையில் தேனைத் தடவி அவர்களை அனுப்பி வைத்தது தலைமை. இந்த நிலையில், எதிர்ப்பையும் மீறி பழையபடி சிட்டிங் பார்ட்டிக்கே சீட்டை ஒதுக்கிவிட்டார்கள். இதனால் நேரடியாக மோத முடியாத ‘உதயப்’ புள்ளி உள்ளடிக்குள் உள்ளடியாக இன்னொரு வேலையைச் செய்திருக்கிறார்.

கோட்டை மாவட்ட தலைநகரில் போட்டியிட விசில் பார்ட்டிக்கு விருப்ப மனு கொடுத்திருந்த நபரை தனது நண்பரின் போனில் தொடர்பு கொண்டு பேசிய ‘உதயப்’ புள்ளி, “தலைமைக்கு இதே வேலையாப் போச்சு. காலங்காலமா நாங்க இவங்களுக்கே உழைச்சு ஒண்ணுமில்லாம போயிட்டு இருக்கோம். இந்தத் தொகுதியில எங்க பார்ட்டியோட சின்னமே மக்களுக்கு மறந்து போச்சு. இந்த முறை இதுக்கு ஒரு முற்றுப்புள்ளி வெச்சாகணும்.

இந்தத் தொகுதியில உங்காளுங்க ஓட்டு மட்டுமே 30 ஆயிரம் இருக்கு. அதனால நீங்க பேசாம இந்தத் தொகுதியைக் கேட்டு வாங்கிட்டு வந்துருங்க. நாங்க எல்லாரும் மறைமுகமா வேலை பார்த்து உங்கள ஜெயிக்க வைக்கிறோம்” என்று ரூட் போட்டுக் கொடுத்தாராம். இதையடுத்து உடனடியாக தலைமைக்கு பேசி ‘கோட்டை’ மாவட்ட தலைநகர் தொகுதிக்குப் பதிலாக ‘அறம்’ தொகுதியை வாங்கிக் கொண்டு வந்துவிட்டாராம் விசில் பார்ட்டி வேட்பாளர்.

SCROLL FOR NEXT