மான்செஸ்டர் மாவட்டத்தை எப்படியும் இம்முறை தங்கள் வசப்படுத்த வேண்டும் என முடிவெடுத்து ‘கரூர் கம்பெனி’ முதலாளியை மான்செஸ்டர் நகரிலேயே போட்டியிட வைத்திருக்கிறது சூரியக் கட்சி தலைமை.
இங்கு போட்டியிடுவதன் மூலம் ‘மான்செஸ்டர் மாவட்டத்து மாண்புமிகு’ என மகுடம் சூட்டிக் கொள்ளலாம் என மனக்கோட்டை கட்டுகிறாராம் ‘கரூர் கம்பெனி’ முதலாளி. ஆனால், இவரை அங்கே நிறுத்தினால் தனது செல்வாக்கை நிரூபிக்க மாவட்டத்தின் பிற தொகுதிகளிலும் ’எப்படியாவது’ சூரியனை உதிக்கவைப்பார் என தலைமை ஒரு கணக்குப் போடுகிறதாம்.
அதேசமயம், ‘கரூர் கம்பெனி’ முதலாளி வருகையால் கலக்கத்தில் இருக்கும் இலைக் கட்சியின் ‘மணியான’ முன்னாள் மாண்புமிகு, ‘மான்செஸ்டர் மாவட்டத்தின் முடி சூடா மன்னர்’ என்ற மகுடம் தனது கைவிட்டுப் போய்விடுமோ என அஞ்சுகிறாராம்.
இதையடுத்து, தாமரைக் கட்சி தலைமையுடன் முரண்டு பிடித்து நிற்கும் ‘மவுன்ட்’ தலைவரை எப்படியாவது தாஜா செய்து அவரை களப்பணிக்கு கொண்டு வந்து இலைக் கட்சி வேட்பாளர்களை ஜெயிக்க வைக்க நினைக்கிறாராம் மிஸ்டர் ‘மணி’. அதன் முதல்படியாகத்தான் மான்செஸ்டர் மாவட்டத்தின் இலைக் கட்சி எம்எல்ஏ-க்களை ‘மவுன்ட்’ தலைவர் வீட்டுக்கு ‘மரியாதை’ நிமித்தம் அனுப்பிவைத்து பேசவைத்தாராம்.