தமிழகம்

‘பாளையம்’ தொகுதி ‘அரசியல்’ | உள்குத்து உளவாளி!

செய்திப்பிரிவு

இலைக் கூட்டணியில் தனக்கான ஒரு இடத்தை தக்கவைத்திருக்கும் ‘ஹைட்டான’ சாதித் தலைவர், தனக்கு ‘பாளையம்’ தொகுதியை தள்ளிவிடுவார்கள் என நினைத்துக்கூடப் பார்க்கவில்லையாம்.

‘பாளையம்’ தொகுதியில் சாதித் தலைவரின் சமூகம் கணிசமாக இருந்தாலும் தனித் தொகுதியான ‘விருது’ மாவட்டத்தின் ’புத்தூர்’ தொகுதியைத்தான் அவர் பெருதும் எதிர்பார்த்தாராம். இந்தத் தொகுதியில் தனது பெண் வாரிசை நிறுத்துவதற்கு திட்டம் வகுத்திருந்தார். இதற்காக, பெண் வாரிசு அங்கம் வகிக்கும் அறக்கட்டளை மூலமாக மருத்துவ முகாம்களை எல்லாம் நடத்தினார்கள்.

          

அதனால் ‘புத்தூர்’ தொகுதியை பிரதானமாக வைத்து மேலும் 5 தொகுதிகளைச் சேர்த்து விருப்பப் பட்டியலில் எழுதிக் கொடுத்திருந்தாராம் சாதித் தலைவர். அதையெல்லாம் விட்டுவிட்டு, ‘பாளையத்தை’ கொடுத்திருக்கிறார்கள். இந்தத் தொகுதிக்கு தாமரைக் கட்சி தலைவர் சிபாரிசில் ஒருவரும், இலைக் கட்சியில் நடிகை ஒருவரும் அந்த மாவட்டத்தின் முன்னாள் ‘அதிரடி’ மாண்புமிகு சிபாரிசில் கிருஷ்ணமானவரும் களத்தில் இருந்தார்கள்.

கடந்த வாரம் கூட அங்கே கூட்டம் போட்ட ‘அதிரடி’ மாண்புமிகு, “இங்கே இலை தான் போட்டியிடும். வேற எவனுக்கும் வேலை இல்லை” என்று வீரவசனமெல்லாம் பேசி இருந்தார். அப்படி இருந்தும், தொகுதியை, எதிர்பார்க்கவே இல்லாத ஒருவருக்கு ‘பாளையத்தை’ தள்ளிவிட்டு நடிகைக்கும் இல்லாமல் தாமரைத் தலைவருக்கும் இல்லாமல் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துவிட்டாராம் திருவாளர் ‘அதிரடி’.

SCROLL FOR NEXT