

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்
“தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் கூட்டணி ஒற்றுமை கருதியும், தேர்தல் பணிகள் பாதிக்கப்படக் கூடாது என்கிற முறையிலும் தொகுதிப் பங்கீட்டில் எங்களுக்குத் திருப்தி இல்லை என்றாலும் அதை ஏற்றுக்கொண்டோம்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார்.
சாதிய படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றுவது தொடர்பாக தமிழக அரசால் நீதிபதி கே.என்.பாட்ஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. அதில் இடம்பெற வேண்டிய பல்வேறு அம்சங்களை பட்டியலிட்டு, ஆணையத்திடம் நீதிபதி பாட்ஷா முன்னிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறியதாவது: தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை வழங்குவது என்பது வழக்கமானது. ஆனால், தமிழகத்தில் நடைமுறைக்கு சாத்தியமா இல்லையா என்பதை பற்றியெல்லாம் கவலைப்படாமல், எப்படியாவது தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, அபரிமிதமான வாக்குறுதிகளை வழங்குவதை பல அரசியல் கட்சிகள் வழக்கமாக வைத்துள்ளன. இதன் காரணமாக, அதில் பலவற்றை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்படுகிறது.
அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் கூட வேலைவாய்ப்பை உருவாக்குவது, புதிய தொழில் வளர்ச்சி போன்ற அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வாக்குறுதிகள் எதுவும் இடம்பெறவில்லை. மாறாக, பெண் வாக்காளர்களைக் கவரும் வகையில் ஃபிரிட்ஜ் வழங்குவது போன்றவற்றில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கின்றனர். பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கான வாக்குறுதிகளை அதிமுக தேர்தல் அறிக்கையில் பார்க்க முடியவில்லை.
கூட்டணியில் எந்தெந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகளை வழங்குவது என்பதை தீர்மானிக்கும் உரிமை கூட்டணிக்கு தலைமை தாங்கும் திமுக-வுக்கு இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் கூட்டணி ஒற்றுமை கருதியும், தேர்தல் பணிகள் பாதிக்கப்படக் கூடாது என்கிற முறையிலும் தொகுதிப் பங்கீட்டில் எங்களுக்குத் திருப்தி இல்லை என்றாலும் அதை ஏற்றுக் கொண்டோம். எங்களுக்கு கூடுதல் தொகுதி கிடைக்கவில்லை என்பது தான் எங்களுக்கு அதிருப்தி. மற்ற கட்சிகளுக்கு கூடுதல் தொகுதிகளை கொடுப்பது பற்றி எங்களுக்கு கவலையில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.