தமிழகம்

‘கோட்டை’ மாவட்ட ‘மலை’ தொகுதி சலசலப்பு | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

‘கோட்டை’ மாவட்டத்தின் ‘மலை’ தொகுதியில் இலைக் கட்சியில் இம்முறையும் முன்னாள் மாண்புமிகு ‘விஜயமானவரே’ போட்டியிடுகிறார். மாவட்ட ‘செயல்’ பொறுப்பிலும் இருக்கும் அவரை எதிர்த்து சூரியக் கட்சியிலும் ‘செயல்’ பொறுப்பில் இருக்கும் ‘செல்லமானவரையே’ நிறுத்தி டஃப் ஃபைட் கொடுக்க வேண்டும் என சொந்தக் கட்சிக்குள்ளேயே சிலர் யோசனை சொல்கிறார்களாம்.

ஆனால், ஆட்சிகள் மாறினாலும் ‘கரிசனம்’ மாறாத அளவுக்கு விஜயமானவரும் செல்லமானவரும் ‘அரசியல் நாகரிகம்’ பேணி வருகிறார்கள். அதனால் தான் கடந்தமுறையே விஜயமானவரின் தொகுதியில் சூரியனை உதிக்க வைப்பதில் உள்ளார்ந்த சிந்தனை இல்லாமல் இருந்தாராம் செல்லமானவர்.

          

இதையெல்லாம் கூட்டிக் கழித்துப் பார்த்தே இம்முறை செல்லமானவரை ‘மலை’ தொகுதியில் மனு தாக்கல் செய்ய வையுங்கள் என்று கோத்துவிடுகிறார்களாம் அவரது உட்கட்சி ‘நண்பர்கள்’. ஆனால் செல்லமானவரோ, ‘மலை’ தொகுதியை ‘வசதியாக’ மறந்துவிட்டு ‘கோட்டை’ தொகுதிக்கு சீட் கேட்டு கட்சியில் மனு போட்டிருக்கிறாராம்.

ஆனால், எக்காரணம் கொண்டும் இவரை ‘கோட்டைக்குள்’ விட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் ‘அயலகப் பொறுப்பாளரின்’ அடிப்பொடிகள், அவர் டெல்லிக்கு ராஜாவாக இருந்தபோது செய்த சேவைகளைப் பட்டியல் போட்டு ‘அண்ணனின் ஃபேன்ஸ்’ என்ற பெயரில் கடந்த சில தினங்களாக வீடியோக்களைப் போட்டு, அவர் தான் ‘கோட்டை’ தொகுதியில் நிற்கப் போகிறார் என்று பில்டப் கொடுத்து வருகிறார்கள்.

SCROLL FOR NEXT