

விசில் கட்சி தலைவர் விறுவிறுவென வேட்பாளர் தேர்வை நடத்தி முடித்துக் கொண்டிருக்கிறார். 25-ம் தேதி முகூர்த்த நாள் என்பதால் இலைக் கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் அன்றைய தினம் வெளியாகலாம் என்கிறார்கள்.
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பதால் அன்றைய தினமே விசில் நாயகரும் தமிழகத்துக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடும் திட்டத்தில் இருக்கிறாராம். இந்த நிலையில், வேட்பாளர் தேர்வில் யார் என்ன விவரம் என்று சரிவரத் தெரியாமலேயே யாரோ எழுதிக் கொடுக்கும் பட்டியலை ஓகே செய்து வருகிறாராம் விசில் லீடர்.
தூங்கா நகரத்தில் சூரியக் கட்சியின் முன்னாள் மாண்புமிகு சீனியர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 13 பேரில் ஒருவராகச் சேர்க்கப்பட்ட ‘கார்த்திகை’ புள்ளி தனது ஆசான் ‘அஞ்சா நெஞ்சரின்’ அநேக ஆசிர்வாதங்களுடன் அண்மையில் விசில் கட்சியில் இணைந்தார். இரண்டாம் கட்ட வேட்பாளர் நேர்காணலுக்கு அவரும் அழைக்கப்பட்டார்.
அவர் குமரன் குடியிருக்கும் ‘குன்றம்’ தொகுதியை எதிர்பார்த்தாரம். ஆனால், “குன்றத்தை ‘நிர்மலமானவருக்கு’ ஒதுக்கிவிட்டோம். நீங்கள் சூரியக் கட்சியின் கீர்த்தி மாண்புமிகுவை எதிர்த்து தூங்கா நகர் ‘கிழக்கில்’ நில்லுங்கள்” எனச் சொல்லி இருக்கிறார்களாம்.
கனவுத் தொழிற்சாலைக்கு ‘கட் அண்ட் ரைட்டாக’ கரன்சி கடன் கொடுக்கும் அன்பும் செழிப்பும் நிறைந்த அந்த ஃபைனான்சியர் இலைக் கட்சியில் இருக்கிறார். அம்மா இருக்கும் போதே அவருக்கு தேர்தல் ஆசை வந்தது. ஆனால், அவர் வந்தால் அத்தனை பேரையும் சாய்த்துவிட்டு அடுத்த கட்டத்துக்குப் போய்விடுவார் என்று பயந்த அப்போதைய மாண்புமிகுக்கள் சிலர், அவரை உள்ளே வரவிடாமல் தடுத்துவிட்டார்கள்.
இப்போது அவரது ‘விவேகமான’ வாரிசு ‘மறுமலர்ச்சி’ கட்சி வசம் இருக்கும் தூங்கா நகர் ‘தெற்கில்’ விசில் கட்சி வேட்பாளராக நேர்காணலுக்கு வந்து போயிருக்கிறார். தனது தந்தை மூலமாக சீட் பெறுவதற்கான ஏற்பாடுகளை ஏக ‘தடபுடலாக’ செய்து வைத்திருக்கிறாராம் இந்தத் தம்பி.