தமிழகம்

‘சீனியர் துரை’யின் சீட் யார் கைக்கு சிக்குகிறது? | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

‘ஜெயில்’ மாவட்டத்தின் ’பாடி’ தொகுதியை நீண்ட காலமாக தனது குடும்பச் சொத்தாகவே வைத்திருப்பவர் சூரியக் கட்சியின் மாண்புமிகு ‘சீனியர் துரை’. கட்சியிலும் முக்கியப் பொறுப்பில் கோலோச்சும் அந்த ‘துரையை’ வயது மூப்பைக் காரணம் காட்டி இம்முறை தேர்தல் களத்தை விட்டு நகர்த்தும் யோசனையில் இருக்கிறதாம் தலைமை.

அதேசமயம், கடந்த முறையே இங்கே தட்டுத் தடுமாறி கோட்டைக்கு வந்த ‘சீனியர் துரையை’ இம்முறை கட்டங்கட்டி கவிழ்க்க இலைக் கட்சியில் பலரும் மும்முரமாக இருக்கிறார்கள். இருந்தாலும், “நான் இறந்த பிறகு எனது அஸ்தியை நான் நேசிக்கும் இந்தத் தொகுதி முழுக்க தூவ வேண்டும்” என தேர்தலுக்குத் தேர்தல் சென்டிமென்ட் வசனம் பேசிவரும் ‘சீனியர் துரை’, “இம்முறையும் தம்பி நம்மள அப்படி எல்லாம் கைவிட்டுடாது” என தலைமையை மலைபோல் நம்புகிறாராம்.

          

அதேசமயம், ஒருவேளை தனக்கு சீட் இல்லை என்று முடிவானால் தனது மருமகளுக்கு அந்த வாய்ப்பைக் கேட்கும் முடிவில் இருக்கிறாராம். அதையும், “குடும்ப ஆட்சி” என்று யாராவது குதர்க்கம் பேசினால், தனக்கு சகல விதத்திலும் ‘சகாயம்’ செய்து கொடுக்கும் பிரபல ‘வேட்டி’ நிறுவனத்தின் பெயரைக் கொண்ட பொதுப்பணித்துறை காண்ட்ராக்டரையும் கரெக்ட் பண்ணி வைத்திருக்கிறாராம் ‘சீனியர் துரை’.

அவர் மீதும் ”வெளி மாவட்டத்துக்காரர்” என யாராவது வெடியைக் கொளுத்தினால் அடுத்த சாய்ஸாக, தனக்கு வந்த வருமான வரித்துறை நோட்டீஸை கையெழுத்துப் போட்டு வாங்குமளவுக்கு நம்பிக்கைக்கு பாத்திரமாக இருக்கும் ‘ஜெயில்’ மாநகரத்தின் துணை ‘வணக்கத்துக் குரியவரை’ கட்சியில் விருப்ப மனு கொடுக்க வைத்திருக்கிறாராம். ‘சீனியர் துரையின்’ சீட் யார் கைக்கு சிக்குதென்று பார்க்கலாம்.

SCROLL FOR NEXT