

காங்கிரஸ் - திமுக தொகுதிப் பங்கீடு நீண்ட இழுபறிக்குப் பிறகு இறுதியான நிலையில், அடுத்ததாக காங்கிரஸின் சிட்டிங் எம்எல்ஏ-க்கள் 12 பேருக்கு மீண்டும் சீட் கொடுக்கக் கூடாது எனவும் அந்தத் தொகுதிகளில் சிலவற்றை தங்களுக்கு விட்டுத்தர வேண்டும் எனவும் திமுக தரப்பிலிருந்து அழுத்தம் தரப்படுவதாகச் சொல்லப் படுவதால் மீண்டும் காங்கிரஸ் வட்டாரம் கொதிநிலைக்கு மாறி வருகிறது.
காங்கிரஸில் தற்போது எம்எல்ஏ-க்களாக இருக்கும் 17 பேரும் மீண்டும் தங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்று காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் தான், அவர்களில் 12 பேருக்கு மீண்டும் சீட் கிடைப்பதில் திமுக செக் வைப்பதாகச் சொல்லப்படுகிறது. இதுகுறித்து அறிவாலய வட்டாரத்தில் இருந்து நம்மிடம் பேசியவர்கள் "திமுக மற்றும் கூட்டணிக் கட்சி எம்எல்ஏ-க்களின் செயல்பாடுகள் குறித்து ‘பென்’ நிறுவனம், முதல்வர் மற்றும் உதயநிதியின் பிரத்யேக வியூகக் குழுக்கள், உளவுத் துறை என மூன்று தரப்பிலிருந்தும் எடுக்கப்பட்ட சர்வேயின் படி காங்கிரஸ் எம்எல்ஏ-க்களில் சிலர் மீது திருப்தியான தகவல் இல்லை.
வேளச்சேரி - அசன் மௌலானா, சிவகாசி - அசோகன், வைகுண்டம் - ஊர்வசி அமிர்தராஜ் தொகுதிகளில் கடும் அதிருப்தி நிலவுகிறது. அதனால் இந்தத் தொகுதிகளை இம்முறை திமுக-வே எடுத்துக் கொள்வது என முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. இதேபோல், தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சிக்கு விட்டுத்தரப்படும் காரைக்குடி தொகுதியிலும் இம்முறை திமுக போட்டியிட வேண்டும் என அங்குள்ள நிர்வாகிகள் பிடிவாதமாக இருக்கிறார்கள். ஆனால், ப.சிதம்பரத்தின் சொந்தத் தொகுதி காரைக்குடி. அவரது ஆதரவாளரான மாங்குடி தான் இப்போது அங்கு எம்எல்ஏ-வாக இருக்கிறார். காரைக்குடி திமுக-வினர் என்னதான் மன்றாடினாலும் சிதம்பரத்தின் விருப்பத்துக்கு மாறாக அங்கே திமுக தலைமை எந்த முடிவையும் எடுக்காது.
குளச்சல் தொகுதியில் தொடர்ச்சியாக பிரின்ஸுக்கே வாய்ப்பளிக்கப் படுவதால் காங்கிரஸ், திமுக என இரு தரப்பிலுமே அதிருப்தி நிலவுகிறது. எனவே, அவரைத் தவிர்த்து இன்னொருவரை அங்கே வேட்பாளராக நிறுத்த காங்கிரஸை வலியுறுத்தும் முடிவில் இருக்கிறது திமுக. சோளிங்கர் எம்எல்ஏ-வான முனிரத்தினமும், விருத்தாசலம் எம்எல்ஏ-வான ராதாகிருஷ்ணனும் கே.எஸ்.அழகிரியின் ஆதரவாளர்கள் என்பதால் செல்வப்பெருந்தகை தரப்பே இவர்களுக்கு எதிராக நிற்கிறது. அதனால் இந்தத் தொகுதிகளையும் தங்களுக்கோ அல்லது தேமுதிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கோ ஒதுக்கும் முடிவில் தான் திமுக தலைமை இருக்கிறது.
இதேபோல் பொன்னேரி துரை சந்திரசேகர், விளவங்கோடு தாரகை கத்பர்ட்டுக்கு எதிராகவும் காங்கிரஸுக்குள்ளேயே புகைச்சல் இருக்கிறது. இவர்களையும் மாற்றி விடும்படி காங்கிரஸுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு முறையாக காங்கிரஸ் வசமுள்ள நீலகிரி தொகுதியிலும் இம்முறை திமுக போட்டியிட வேண்டும் என அங்குள்ள நிர்வாகிகள் விரும்புகிறார்கள். பெரும்புதூரில் செல்வப்பெருந்தகைக்கு எதிராகவும் அதிருப்தி நிலவுகிறது. அவருக்கு மீண்டும் சீட் கொடுக்கக் கூடாது என திமுக நிர்வாகிகள் முதல்வரிடம் நேரடியாகவே கோரிக்கை வைத்திருக் கிறார்கள். அவரும் இம்முறை அங்கு போட்டியிடும் மனநிலையில் இல்லை. கிள்ளியூர் ராஜேஷ்குமார் திமுக-வை சங்கடப்படுத்தும் விதமாகப் பேசிவருவதால், அவரையும் மாற்றச் சொல்லும் முடிவில் இருக்கிறது எங்கள் தலைமை” என்றனர்.
இதுகுறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் கேட்டதற்கு, "நாங்கள் எந்த சர்வேயும் எடுக்கவில்லை. காங்கிரஸில் யாருக்கு சீட் கொடுக்க வேண்டும் என்பதை அந்தக் கட்சித் தலைமை தான் முடிவு செய்யும்” என்றார்.