சென்னை: மெரினா கடற்கரையில் அலையால் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணியை, கடலோர காவல் படையின் மெரினா உயிர்காக்கும் குழுவினர் காப்பாற்றினர்.
சென்னை மெரினா கடற்கரை கண்ணகி சிலை பின்புறம் நேற்றுமுன்தினம் கடலில் குளித்துக் கொண்டிருந்த வெளிநாட்டு இளம்பெண் ஒருவர் திடீரென கடல் அலையால் இழுக்கப்பட்டு சுமார் 100 மீட்டர் தூரம் வரை கடலுக்குள் சென்று தத்தளித்துள்ளார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள், அங்கிருந்த பாதுகாப்புப் பணி காவலர்களுக்கு தகவல் அளித்துள்ளனர். உடனடியாக, மெரினா உயிர் காக்கும் குழுவினருக்கு தகவல் அளித்து காவலர் முத்து சரவணன் மற்றும் மீனவர்களான பவினேஷ், விக்னேஷ் ஆகியோர் கடலுக்குள் குதித்து பத்திரமாக இளம் பெண்ணை மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.
பின்னர், மருத்துவக் குழுவினர் வந்து முதலுதவி சிகிச்சை அளித்தனர்.போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த இளம் பெண் அனுஷ்கா என்பது தெரிய வந்தது.
சில தினங்களுக்கு முன்பாக, தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களோடு சென்னைக்கு சுற்றுலா வந்ததும், சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் தங்கி வருவதும் தெரியவந்தது. பின்னர், அனுஷ்காவை பத்திரமாக அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களோடு போலீஸார் அனுப்பி வைத்தனர்.