ஈரோடு: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டு வந்த துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கும், செங்கோட்டையனுக்கும் இடையே பனிப்போர் நிலவியது.
இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோபிசெட்டிப்பாளையத்தை அடுத்த குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையன் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு, சுழற்சி முறையில் 24 மணி நேரமும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
பின்னர், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடந்த மாதம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து தனது எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
பின்னர், தவெக தலைவர் விஜய் முன்னிலையில், அக்கட்சியில் தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் இணைந்தார்.
இதையடுத்து, அவரை சந்திக்க தவெகவினர் அதிக எண்ணிக்கையில் அவரது வீட்டுக்கு வந்து செல்கின்றனர். இதனால் வட மாநிலத்தைச் சேர்ந்த 2 பவுன்சர்கள் செங்கோட்டையன் வீட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் தவெக சார்பில் நியமிக்கப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த சூழலில், செங்கோட்டையன் வீட்டுக்கு வழங்கப்பட்டிருந்த துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு நேற்று திரும்பப் பெறப்பட்டுள்ளது.