சென்னை: நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டுக்கான போலீஸ் பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
இதையடுத்து, முதல்வராக விஜய் பதவியேற்க உள்ளார். இதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இது ஒருபுறம் இருக்க, தேர்தல் முடிவு வெளியான நேரத்திலேயே விஜய்யின் நீலாங்கரை வீடு மற்றும் பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
500-க்கும் மேற்பட்ட போலீஸார் நிறுத்தப்பட்டனர். விஜய்யின் வீட்டின் முன்பு வெடிகுண்டுகளை கண்டறியும் மெட்டல் டிடெக்டர் இயந்திரம் வைக்கப்பட்டது. அதோடு மட்டும் அல்லாமல் முதல்வருக்கென்று உள்ள பிரத்யேக பாதுகாப்பு (கான்வாய்) விஜய்க்கு வழக்கப்பட்டது.
மேலும் சென்னை போலீஸாருடன் ஒருங்கிணைந்து மத்திய ஆயுதப்படை போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். வீடு மற்றும் அலுவலகத்தை சுற்றிலும் கூடுதல் பேரிகார்டுகள் போடப்பட்டன.
இந்நிலையில் விஜய் வீடு மற்றும் அலுவலகத்துக்கு போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் முதல்வருக்கான பிரத்யேக கான்வாய் ஆகியவை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன.
வழக்கமாக செல்லும் ரோந்து பணிகளில் மட்டும் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். விஜய் கேட்டுக் கொண்டதால் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் சி.டி.நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார். விஜய் பதவி ஏற்பதில் தாமதம் மற்றும் சிக்கல் நிலவுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.