திருத்தணி மலை அடிவாரத்தில் போலீஸார் தடுத்து நிறுத்தியதால் அனுமதிக்காக காரில் காத்திருந்த முன்னாள் அமைச்சர் சேகர்பாபு.

 
தமிழகம்

திருத்தணி: முன்னாள் அமைச்சர் சேகர்பாபு காரை தடுத்து நிறுத்திய போலீஸார்

செய்திப்பிரிவு

திருத்தணி: திருத்தணியில் ஆடிக்கிருத்திகை திருவிழாவையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைப்பாதை வழியாக கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து வருவதால், மலைப்பாதையில் கோயில் நிர்வாகம் சார்பில் இயக்கப்படும் பேருந்துகள் மற்றும் கோயில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட அனுமதிச் சீட்டு பெற்றுள்ள கார் மற்றும் இருசக்கர வாகனங்களை மட்டுமே போலீஸார் அனுமதித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஒவ்வோர் ஆண்டும் ஆடிக்கிருத்திகை அன்று காவடிஎடுத்து வந்து, குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்துவரும் திமுகவைச் சேர்ந்த இந்து சமய அறநிலையத் துறை முன்னாள் அமைச்சரும், துறைமுகம் தொகுதி எம்எல்ஏவுமான சேகர்பாபு வழக்கம்போல் நேற்று அதிகாலை, குடும்பத்துடன் திருத்தணி கோயிலுக்கு வந்தார்.

அப்போது, கோயில் மலை அடிவாரத்தில் பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸார், ``சிறப்பு அனுமதி பெறாததால் மலைப்பாதையில் செல்ல அனுமதியில்லை'' எனக்கூறி, சேகர்பாபுவின் காரை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால், போலீஸாருக்கும் சேகர்பாபுவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, சேகர்பாபுவை வரவேற்க வந்த, சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், போலீஸாரிடம், ``அவர் முன்னாள் அமைச்சர், தற்போதைய எம்எல்ஏ. ஆகவே, அவரது காரை மலைப்பாதையில் செல்ல அனுமதியுங்கள்'' எனக்கூறியும், அதனை போலீஸார் ஏற்கமறுத்ததாக கூறப்படுகிறது.

சுமார் 30 நிமிடங்கள் வரை சேகர்பாபு காத்திருந்த நிலையில், பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார், காவல்துறை உயரதிகாரி ஒருவரிடம் தகவல் தெரிவித்துவிட்டு, சேகர்பாபுவின் கார் மற்றும் அவரது காருடன் வந்த 2 கார்களையும் மலைப்பாதையில் செல்ல அனுமதித்தனர். பின்னர், சேகர்பாபு கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு, சென்னை திரும்பினார். இச்சம்பவத்தால் நேற்று திருத்தணியில் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT