சென்னை/ கரூர்: தவெக எம்எல்ஏவிடம் ரூ.35 கோடி பேரம் பேசப்பட்ட விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி எம்எல்ஏ மற்றும் அவரது தம்பி அசோக்குமாருக்கு முக்கிய தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்ததை அடுத்து, அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும் ஆட்சி அமைக்கத் தேவையான 118 என்ற பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து, திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் விஜய் முதல்வரானார். சட்டப்பேரவையில் மே 13-ம் தேதிநடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தோழமைக் கட்சிகள் மற்றும் அதிமுகவில் இருந்து 25 உறுப்பினர்கள் என மொத்தம் 144 உறுப்பினர்களின் ஆதரவுடன் தவெக அரசு வெற்றி பெற்றது.
இந்த நிலையில், விஜய் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்க சதி நடந்துள்ளதாக வெளியான தகவல் அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏவான டாக்டர் என்.இளையராஜாவை அணுகிய நபர்கள், ‘‘சட்டப்பேரவையில் (சபாநாயகருக்கு எதிரான) நம்பிக்கை இல்லா தீர்மானத்தின்போது நாங்கள் சொல்வதுபோல் நீங்கள் நடந்து கொள்ள வேண்டும். அதற்காக உங்களுக்கு ரூ.35 கோடி தருகிறோம்’’ என்று கூறியுள்ளனர். ஒரு பிரதான கட்சியைச் சேர்ந்த சிலர் கேட்டுக்கொண்டதன் பேரில் இவ்வாறு தொடர்புகொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது தவெக ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான சதி என யூகித்துக்கொண்ட எம்எல்ஏ இளையராஜா, அதற்கு உடன்பட மறுத்ததோடு, உடனடியாக இது குறித்து கட்சி மேலிடத்துக்கு தகவல் கொடுத்துள்ளார். பின்னர், தலைமையின் ஒப்புதலோடு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த 29-ம் தேதி புகார் அளித்தார். காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின்பேரில் திருவல்லிக்கேணி போலீஸார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் பல முக்கிய தகவல்கள் தெரியவந்துள்ளன.
இதையடுத்து, தேர்தல் நேரங்களில் கருத்துக் கணிப்புகளை நடத்தும் ‘ஐபிடிஎஸ்’ என்ற நிறுவனத்தை நடத்தும் சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு, அவருக்கு பின்னணியாக செயல்பட்ட திருச்சியைச் சேர்ந்த நரேஷ், சென்னை மேடவாக்கத்தைச் சேர்ந்த தியாகராஜன் ஆகிய 3 பேரை அடுத்தடுத்து கைது செய்த போலீஸார், நேற்று முன்தினம் இரவு அவர்களை புழல் சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய ஆதரவாளர்கள் என கூறப்படும் சக்திமெஸ் கார்த்திக், ரமேஷ் ஆகிய இருவரும் கரூரில் பிடிபட்டனர். அவர்களும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டனர். தொடர்ந்து நடத்தப்பட்ட புலன் விசாரணையில், திமுக முன்னாள் அமைச்சர்செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் இதுதொடர்பாக சென்னையில் நரேஷை சந்தித்துள்ளார். செந்தில் பாலாஜி மற்றும் அசோக்குமார் ஆகியோரது அறிவுரையின் பேரிலேயே எம்எல்ஏ இளையராஜாவை திருநாவுக்கரசு தொடர்பு கொண்டு பேரம் பேசியுள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, இந்த வழக்கில் அசோக்குமாரையும் போலீஸார் சேர்த்துள்ளனர். அவரை கைது செய்வதற்கான நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது. அவர் செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்து, தலைமறைவாகி விட்டதாக போலீஸார் தெரிவித்தனர். அவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தவெக எம்எல்ஏ இளையராஜாவை தங்கள் பக்கம் இழுக்க கரூரில் திமுக ஆதரவாளர்கள் தனியாக ஒரு சதித் திட்டம் தீட்டியதாகவும் தகவல் வெளியானது. அவரைப் போலவே வேறு சில தவெக எம்எல்ஏக்களிடம் இதுபோல பேரம் நடந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியையும் கைது செய்ய போலீஸார் முடிவு செய்து விசாரணை வளையத்தை விரிவுபடுத்தி உள்ளனர்.
ரூ.35 கோடி பேரத்தின் பின்னணியில் மேலும் சில முக்கிய பிரமுகர்கள் இருப்பது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. செந்தில் பாலாஜியின் மிக நெருங்கிய ஆதரவாளர்களே இந்த பேரத்துக்கு மூளையாக செயல்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
கரூரில் உள்ள தங்கும் விடுதிகளில் போலீஸார் நேற்று தீவிர சோதனை மேற்கொண்டனர். கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள செந்தில் பாலாஜி, அசோக்குமாரின் வீடுகளை புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து, கரூரில் முகாமிட்டு, தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை 8 பேர் கைது: ஏற்கெனவே இந்த விவகாரத்தில் திருநாவுக்கரசு, நரேஷ், தியாகராஜன் ஆகிய 3 பேர் கைது செய்து, சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்பின்னர், விசாரணையில் இருந்த கார்த்திக், ரமேஷ் ஆகிய இருவரை கைது செய்த போலீஸார் கூடுதலாக சென்னை பள்ளிக்கரணையைச் சேர்ந்த சீனிவாசன் (46), செல்வன் (54), குரோம்பேட்டையைச் சேர்ந்த ராஜேஷ் (43) என மேலும் 3 பேரை கைது செய்துள்ளனர். கைதான சீனிவாசன் அதிமுக பிரமுகர் என்று கூறப்படுகிறது.