சென்னை: ஜாமீனை ரத்து செய்யக்கோரி போலீஸார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு, இன்று பிற்பகலுக்குள் பதில் மனு தாக்கல் செய்யாவிட்டால் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என சவுக்கு சங்கர் தரப்புக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
பிரபல யூடியூபரும், சவுக்கு மீடியா முதன்மை செயல் அதிகாரியுமான சவுக்கு சங்கர் மீது ஆதம்பாக்கம் மற்றும் சைதாப்பேட்டை போலீஸார் பதிவு செய்த மோசடி வழக்குகளில் அவரை கடந்த டிச.13-ம் தேதி கைது செய்தனர்.
தனது மகனுக்கு மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் வழங்க வேண்டுமென சவுக்கு சங்கரின் தாயார் கமலா தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், சவுக்கு சங்கருக்கு மார்ச் 25 வரை இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.
இந்நிலையில், சவுக்கு சங்கருக்கு வழங்கப்பட்டுள்ள இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரி சைதாப்பேட்டை காவல் ஆய்வாளர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதில், ‘மருத்துவ காரணங்களைக்கூறி ஜாமீன் பெற்றுள்ள சவுக்கு சங்கர் நிபந்தனைகளை மீறி வீடியோ பதிவுகளை போட்டு வருகிறார். எனவே, அவருக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமீனை ரத்து செய்ய வேண்டும். அவரது உடல்நிலையை கண்காணிக்க மருத்துவக்குழுவை அமைக்கவும் தயாராக இருக்கிறோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த நீதிபதிகள் பி.வேல்முருகன், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு, இதுதொடர்பாக சவுக்கு சங்கர் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று இதே அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சவுக்கு சங்கர் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யவில்லை. மேலும், வழக்கை இந்த அமர்வு விசாரிக்க வேண்டாம் என்றும், வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றக்கோரி மனு அளித்துள்ளதாகவும் சவுக்கு சங்கர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள், ‘‘இந்த நீதிமன்றத்தை அச்சுறுத்தி பார்க்கும் தொணியில் செயல்பட வேண்டாம். மனசாட்சிக்கு மட்டும்தான் பயப்படுவோம். நாங்கள் இந்த வழக்கில் இருந்து விலகப் போவதில்லை.
வேண்டுமென்றால் நீங்கள் தலைமை நீதிபதியிடம் முறையிட்டு நிவாரணம் பெற்றுக்கொள்ளுங்கள். நாளை (இன்று) பிற்பகலுக்குள் இந்த வழக்கில் பதில்மனு தாக்கல் செய்யவில்லை என்றால் வழக்கின் தகுதியின் அடிப்படையில் உரிய உத்தரவை பிறப்பிப்போம்’’ என சவுக்கு சங்கர் தரப்புக்கு அறிவுறுத்தி விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.