

மதுரை: அரசு பேருந்துகளில் ‘தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்’ என குறிப்பிடக்கோரிய வழக்கில் போக்குவரத்துறை முதன்மைச் செயலாளர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்த செல்வகுமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு சொந்தமான பேருந்துகளில் இதுவரை ‘தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்’ என அச்சிடப்பட்டிருந்தது.
தற்போது தமிழ்நாடு என்ற வார்த்தை நீக்கப்பட்டு, ‘அரசு போக்குவரத்துக் கழகம்’ என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் முன்பிருந்தது போல் அரசு பேருந்துகளில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் என குறிப்பிடக்கோரி அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்கவில்லை.
அரசு பேருந்துகளில் பெயர் மாற்றம் செய்ததற்காக தமிழக போக்குவரத்து துறையின் முதன்மைச் செயலர், தமிழ் வளர்ச்சித் துறையின் முதன்மைச் செயலர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் தலைமை மேலாளர் ஆகியோரிடமிருந்து ரூ.10 கோடி அபராதம் வசூலிக்கவும், அரசு பேருந்துகளில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் என முழுமையாக அச்சிடப்பட்டிருப்பதை உறுதி செய்யவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராம கிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், தமிழ்நாடு என்ற வார்த்தை இல்லாமல் இருப்பது தொடர்பாக போக்குவரத்து கழகத்திடம் கேள்வி எழுப்பியதற்கு, அந்த வார்த்தையை எழுத இடம் போதவில்லை என்பதாலும், சிறிய எழுத்துக்களில் குறிப்பிட்டால் பெயர் தெரியாமல் போகும் என்பதாலும் தமிழ்நாடு என குறிப்பிடப்படவில்லை என பதில் அளிக்கப்பட்டது.
இந்த காரணம் ஏற்கும்படியாக இல்லை என்றார். இதையடுத்து நீதிபதிகள், மனு தொடர்பாக தமிழக போக்குவரத்து துறை முதன்மைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.