சென்னை: வழக்கு தொடர்பாக ஆலோசனை நடத்த வந்த முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸை வழக்கறிஞர் அலுவலகத்துக்கு வெளியே ஒன்றரை மணி நேரம் காத்திருந்து கைது செய்தோம் என உயர் நீதிமன்றத்தில் காவல் துறை விளக்கமளித்துள்ளது.
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக்கூறி ரூ. 400 கோடிக்கு மேல் வசூலித்து பணமோசடியில் ஈடுபட்டதாக தனக்கு எதிராக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் தாக்கல் செய்திருந்த மனு நீதிபதி வி.லட்சுமி நாரா
யணன் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன் மற்றும் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் அருண் அன்புமணி ஆகியோர், ” அன்பில் மகேஸ் தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு ஜாமீன் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். போலீஸார் தரப்பில் 5 நாட்கள் காவல் கோரி நாங்களும் மனு தாக்கல் செய்துள்ளோம்.
இந்த வழக்கில் தலை மறைவாக இருந்த முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமார் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ( நேற்று) சரண் அடைந்துள்ளார். எனவே இந்த வழக்கை ரத்து செய்யக்கூடாது” என வாதிட்டனர்.
அப்போது அன்பில் மகேஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன்,“ அன்பில் மகேஸுக்கு முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை இந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், அடுத்தகட்டமாக உச்ச நீதிமன்றத்தை நாடுவது தொடர்பாக எனது அலுவலகத்துக்கு வந்து ஆலோசனை நடத்திய அன்பில் மகேஸை 40-க்கும் மேற்பட்ட போலீஸார் எனது அலுவலக வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்து கைது செய்யும் அளவுக்கு தமிழகத்தில் போலீஸ் ராஜ்ஜியம் நடக்கிறது. இதற்கு முன்பாக இதுபோல எங்கும் நடைபெற்றது இல்லை’ என குற்றம் சாட்டினார்.
நீதிமன்றம் நிராகரிப்பு
அப்போது காவல்துறை தரப்பில், அலுவலகத்தின் வெளியே சுமார் ஒன்றரை மணி நேரம் காத்திருந்து தான் அன்பில் மகேஸை கைது செய்தோம்.
மூத்த வழக்கறிஞரின் அலுவலகத்துக்குள் அத்துமீறி புகுந்து எல்லாம் அவரை கைது செய்யவில்லை. இந்த குற்றச்சாட்டை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றமும் நிராகரித்துள்ளது’ என தெரிவி்க்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதி, இதுதொடர்பான வீடியோ ஆதாரங்களுடன் மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தி, வழக்கை ரத்து செய்யக்கோரி அன்பில் மகேஸ் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையை வரும் நவ.10-க்கு தள்ளி வைத்துள்ளார்.
ஜாமீன் மனு மீது பதிலளிக்க உத்தரவு
தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதேபோல அன்பில் மகேஸை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தரப்பிலும் சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் மீதான விசாரணை சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எல்.எஸ்.சத்திய மூர்த்தி முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அன்பில் மகேஸின் ஜாமீன் மனு மீது பதிலளிக்க போலீஸார் தரப்பி்ல் அவகாசம் கோரப்பட்டது. அதையேற்ற நீதிபதி, அன்பில் மகேஸின் ஜாமீன் மனு மற்றும் காவலில் எடுத்து விசாரி்க்க அனுமதி கோரும் மனு மீதான விசாரணையை வரும் நவ.2-க்கு தள்ளி வைத்துள்ளார்.