முன்னாள் அமைச்சர் பி.மூர்த்தி வீட்டில் நடந்த சோதனையின்போது பாதுகாப்பில் ஈடுபட்ட போலீஸார். படம்: நா.தங்கரத்தினம்
மதுரை: குவாரியில் அனுமதித்த அளவை விட கூடுதலாக கனிம வளங்களை வெட்டி எடுத்ததாக, முன்னாள் வணிகவரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி மீது வழக்குப் பதிவு செய்த மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார், அவரது வீடுகள் மற்றும் உறவினர் வீடுகளில் 4 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை செய்தனர்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகிலுள்ள சத்திரவெள்ளாளப்பட்டி பகுதியில் முன்னாள் அமைச்சர் மூர்த்திக்கு சொந்தமான பட்டா இடம் உள்ளது. இந்த இடத்தில் கல்குவாரி நடத்த 2019 முதல் 2014-ம் ஆண்டு வரை அரசு அனுமதியுடன் குத்தகைக்கு விடப்பட்டது. இக்குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக செம்மண், சரளைக் கற்கள் போன்ற கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டதாக, பி.மூர்த்தி மற்றும் அவரது உறவினர்கள் மீது புகார் எழுந்தது.
இது தொடர்பாக, வருவாய்த் துறையினர் நடத்திய ஆய்வில் ரூ.5.39 கோடிக்கு அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக, கனிமவளத் துறைக்கு அறிக்கை சமர்ப்பித்தனர். இதன் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் பி.மூர்த்தி, அவரது மைத்துனர்கள் பூவந்தியைச் சேர்ந்த ராஜாமணி, பாலமேட்டைச் சேர்ந்த செந்தில்குமார் மற்றும் அனந்தகுமார் ஆகியோர் மீது மதுரை மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸார் 2 வழக்குகளை பதிவு செய்தனர்.
இந்த வழக்குகள் தொடர்பாக, மதுரை அய்யர் பங்களா எழில் நகரில் உள்ள பி.மூர்த்தியின் வீடு, மைத்துனர்களான ராஜாமணி, செந்தில்குமார் மற்றும் கட்சிபிரமுகர் தன்ராஜ் ஆகியோரது வீடுகளிலும் நேற்று காலை 7 மணி முதல் டிஎஸ்பி பொன்னரசு தலைமையில் 15-க்கும் மேற்பட்ட போலீஸார் சோதனை மேற்கொண்டனர். மூர்த்தி முன்னிலையில் நடந்த இந்த சோதனை 4 மணி நேரம் நடந்தது.
தகவலறிந்த திமுக மாநகர மாவட்டச் செயலாளர் கோ.தளபதி, புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் எம்.மணிமாறன், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஆர்.பாலாஜி, மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் குழு தலைவர் ஜெயராம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பி.மூர்த்தியின் வீட்டருகே திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குத்தகைக்கு விட்டேன்: செய்தியாளர்களிடம் பி.மூர்த்தி கூறியதாவது: சத்திரவெள்ளாளபட்டியிலுள்ள எனக்குச் சொந்தமான பட்டா இடத்தில் குவாரி நடத்த ஒப்பந்த அடிப்படையில் 2019 முதல் 5 ஆண்டுகளுக்கு ராஜாமணி, ஆனந்தராஜ் ஆகியோருக்கு மாவட்ட ஆட்சியரின் முறையான அனுமதியுடன் குத்தகைக்கு விடப்பட்டது. ஆனால், அந்த இடத்தில் உகந்த கற்கள் கிடைக்கவில்லை என்பதால், 2021-ல் ஆனந்தராஜ் குவாரியை கைவிட்டார். ராஜாமணிக்கும் கற்கள் கிடைக்கவில்லை.
இதையடுத்து, அருகில் இருந்த எனது பட்டா இடத்தையும் அவர்களுக்கு குத்தகைக்கு கொடுத்தேன். அந்த இடத்தில் மண் எடுத்திருப்பதாக, உண்மைக்கு புறம்பாக என் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என ஏற்கெனவே கோட்டாட்சியரிடம் விளக்கம் கொடுத்து இருக்கிறேன். இது தொடர்பான வழக்கில், எனது இடத்தை முறையாக அளந்து ஒப்படைக்க நீதிபதி உத்தரவு வழங்கியுள்ளார்.
இதையெல்லாம் பொருட்படுத்தாமல், தற்போது எனது பட்டா இடத்தில் மண் எடுத்திருப்பதாக பொய்யான வழக்கு பதியப்பட்டுள்ளது. இவ்வழக்கை சட்டரீதியாக அணுகுவேன் என்றார்.
முன்னாள் அமைச்சர் பி.மூர்த்தி வீட்டில் நடந்த சோதனையின்போது பாதுகாப்பில் ஈடுபட்ட போலீஸார். படம்: நா.தங்கரத்தினம்