புதுச்சேரி: புதுச்சேரி தவெக பொதுக் கூட்டத்துக்கு கைத்துப்பாக்கியுடன் வந்தவரை போலீஸார் பிடித்தனர்.
புதுவை உப்பளம் துறைமுக வளாகத்தில் இன்று தவெக பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தப் பொதுக் கூட்டத்துக்கு காலை முதல் தொண்டர்கள் வரத் தொடங்கினர். அவர்களை போலீஸார் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்து, கியூஆர் கோடு பாஸ் பரிசோதனை செய்து அனுமதித்தனர்.
ஒருவரை சோதனை செய்தபோது, அவரிடம் கைத்துப்பாக்கி இருந்தது. அவர் தனது துப்பாக்கிக்கு லைசென்ஸ் இருப்பதை காட்டினார். அதில் தமிழக முகவரி இருந்தது.
ஆனால், போலீஸார் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு புதுவையில் அனுமதியில்லை. பொதுக் கூட்டத்துக்கு ஏன் துப்பாக்கி எடுத்து வந்தீர்கள்? என கேள்வி எழுப்பினர். மேலும் அவரிடம் விசாரணை நடத்த ஓதியஞ்சாலை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த டேவிட் என்பதும், மத்திய சிஆர்பிஎப் படையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர் என்பதும் தெரியவந்தது.
சிவகங்கை கிழக்கு மாவட்ட செயலாளர் டாக்டர் பிரபுவின் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலராக அவர் பணியில் உள்ளார். டாக்டர் பிரபுவின் பாதுகாப்புக்கு, அரசு அனுமதியுடன் 2 பேர் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர்தான் டேவிட் என்பதும் தெரியவந்தது.