தமிழகம்

“அன்புமணியை தரக்குறைவாக பேசுவதை ஸ்ரீகாந்தி நிறுத்திக் கொள்ள வேண்டும்” - வழக்கறிஞர் பாலு

தமிழினி

சென்னை: “சேலத்தில் இன்று ராமதாஸ் தலைமையில் நடந்தது பொதுக்குழுவே அல்ல. அது கேலிக் கூத்து. அன்புமணியை தரக்குறைவாக பேசுவதை ஸ்ரீகாந்தி நிறுத்திக்கொள்ள வேண்டும்” என அன்புமணி தரப்பு வழக்கறிஞர் பாலு விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “பாமகவின் பொதுக் குழுவை கூட்ட அன்புமணிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. ராமதாஸ் தலைமையில் நடந்தது பாமக பொதுக் குழுவே அல்ல; அது கேலிக்கூத்து.

இந்தியாவிலேயே முதல்முறையாக செயற்குழுவும், பொதுக்குழுவும் ஒன்றாக நடந்தது இங்குதான். இந்த பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட எந்த தீர்மானமும் பாமகவை கட்டுப்படுத்தாது.

இந்தக் கூட்டத்தில் 2 கேலிக் கூத்துக்கள் நடந்துள்ளது. அதில் ஒன்று, கட்சியின் தலைவராக மருத்துவர் ராமதாஸை தேர்வு செய்வதாக தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். 2-வது கேலிக்கூத்து பசுமைத் தாயகம் தலைவர் மாற்றம் செய்யப்பட்டது. பசுமைத் தாயகம் என்பது ஒரு என்ஜிஓ. ஐ.நா.சபையால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அமைப்பு. பசுமைத் தாயகம், அறக்கட்டளை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த அமைப்பின் தலைவரை இன்னொரு அமைப்பின் கூட்டத்தில் தேர்வு செய்வது கேலிக்கூத்தாக உள்ளது. பசுமைத் தாயத்தின் நிர்வாகிகள் சேர்ந்துதான் அதன் தலைவரை தேர்வு செய்ய முடியும். சுற்றுச்சூழல், நீர்வளம் பற்றி பல்வேறு இடங்களில் சவுமியா அன்புமணி பேசி வருகிறார். ஜி.கே மணி இன்று ஒரு கேலிக்கூத்தை அரங்கேற்றியிருக்கிறார். திமுக சொன்னதை செய்கிறோம் என ஜி.கே மணி செயல்படுகிறாரா என தெரியவில்லை.

ஒரு பொம்மை போல ராமதாஸை வைத்திருக்கிறார்கள். அன்புமணியின் சகோதரி ஸ்ரீகாந்தி, அன்புமணியை தரக்குறைவாக பேசுகிறார். இதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

பொதுவெளியில் எங்கள் கட்சியின் தலைவரை இப்படி பேசக்கூடாது. அவர்கள் இருவரும் அக்கா – தம்பி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அன்புமணியை வாடா போடா என்று ஸ்ரீகாந்தி வீட்டில் பேசலாம். பொதுவெளியில் இப்படி பேசுவது கண்டிக்கத்தக்கது.

அன்புமணியையும், சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் எங்களை திட்டவே பொதுக் குழு என்ற பெயரில் நாடகம் நடந்துள்ளது. அரசியல் விவகாரங்கள், திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதா? இதற்கு காரணம் ஜி.கே.மணி தான். அவரின் இரட்டை வேடம் ஏற்கெனவே கிழிந்துவிட்டது. தைலாபுரம் தோட்டம் திமுகவின் கிளை அலுவலகம் (branch office). திமுக தான் ஜி.கே மணியை இயக்குகிறது. அன்புமணி அவரது தந்தை பிரச்சினையை கவனமாக கையாள்கிறார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT