படம் : எல்.சீனிவாசன்

 
தமிழகம்

“பாமகவில் இருந்து விலகவும் தயார்” - அன்புமணி குற்றச்சாட்டுகளுக்கு ஜி.கே.மணி உருக்கமான பதில்!

தமிழினி

சென்னை: “ராமதாஸ் - அன்புமணி இருவரும் ஒன்றாக இணைந்தால், நான் பாமகவில் இருந்து விலக தயார், பாமகவில் எனக்கு எந்தப் பதவியும் வேண்டாம். எம்எல்ஏ பதவியைக் கூட ராஜினாமா செய்கிறேன்” என பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “35 வயதில் அன்புமணியை மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்தவர் ராமதாஸ். இன்றைக்கு பாமக வளர்ந்ததற்கு ராமதாஸ்தான் முக்கிய காரணம். ராமதாஸ், பாளையங்கோட்டை சிறைக்கு தான் செல்லவில்லை மற்ற எல்லா சிறைக்கும் சென்றுவிட்டார்.

பாமகவுக்கு ஒரு சோதனை என்றால், ராமதாஸால் எப்படி தாங்கிக் கொள்ள முடியும். அன்புமணி, ராமதாஸைப் பார்த்து என் அப்பா குழந்தை மனசாக மாறிவிட்டார், மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறார் எனக் கூறிகிறார். அவருடன் இருப்பவர்கள் அவரை கெடுக்கிறார்கள் என அன்புமணி கூறுவது மிக அநாகரீகமானது. அன்புமணியின் செயல்பாடுகளால் ராமதாஸ் தான் கண்ணீர் வடிக்கிறார்.

என்னைப் பார்த்து, எங்கள் கட்சியில் உழைத்தவர்களைப் பார்த்து ராமதாஸ் உடன் இருப்பவர்களை எல்லாம் பார்த்து அன்புமணி துரோகி என்கிறார். ஜி.கே.மணி தான் என்னையும், எங்க அப்பாவையும் பிரித்துவிட்டார் என்று சொல்கிறார். இதெல்லாம் எவ்வளவு வேதனையாக இருக்கும்.

அன்புமணிக்கு ஒன்றிய அமைச்சர் பதவி வாங்கிக் கொடுக்குமாறு ராமதாஸை நான்தான் சம்மதிக்க வைத்தேன். இதுகுறித்து பேசும்போது ராமதாஸ் என் மீது மிகவும் கோபப்பட்டார். அன்புமணிக்கு எந்த வகையிலும் நான் கெடுதலோ, துரோகமோ நினைத்ததில்லை.

அப்பாவையும் மகனையும் பிரித்துவிட்டதாக மனசாட்சி இல்லாமல் பேசுகிறார் அன்புமணி. அப்பாவையும், மகனையும் பிரிக்க முடியுமா?. உங்கள் மகன் அன்புமணியை நீங்கள் பார்க்காதீர்கள் என நான் சொல்ல முடியுமா, இல்லை நான் சொன்னால் ராமதாஸ் கேட்பாரா, பிறகு எப்படி நான் அவர்களைப் பிரிக்க முடியும்? ராமதாஸும் அன்புமணியும் உட்கார்ந்து பேசினால்தான் தீர்வு கிடைக்கும். ராமதாஸிடமிருந்து, கட்சியை பிரித்து எடுத்துச் செல்லவேண்டுமென அன்புமணி நினைக்கிறார்.

நான் ராமதாஸிடன் இருப்பதால் தான் அன்புமணி இப்படிப் பேசுகிறார். நாங்கள் ராமதாஸை ராஜாவாக பார்க்கிறோம். அன்புமணியை ராஜா வீட்டு கன்னுக்குட்டியாக பார்க்கிறோம். ராஜா வீட்டு கன்னுக்குட்டி, எட்டி உதைக்கும், சீறீப்பாயும் என நாங்கள் பொறுமையாகத்தான் இருக்கிறோம்.

ராமதாஸ் - அன்புமணி இருவரும் ஒன்றாக இணைந்தால், நான் பாமகவில் இருந்து விலக தயார், பாமகவில் எனக்கு எந்தப் பதவியும் வேண்டாம். அன்புமணி யார் யார் துரோகிகள் என நினைக்கிறாரோ, அவர்கள் அனைவரும் கட்சியில் இருந்து வெளியேறத் தயார்.

நானோ என் குடும்பத்தினரோ கட்சியில் இருக்க மாட்டோம்; எம்எல்ஏ பதவியைக் கூட ராஜினாமா செய்கிறேன். வேறு கட்சியிலும் சேரமாட்டோம், மீண்டும் நீங்கள் அழைத்தால் பாமகவில் சேருகிறோம். ராமாதாஸுடன் வந்து அன்புமணி செயல்படட்டும். கட்சி நன்றாக இருக்க வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT