அன்புமணி
பாமக தலைமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டப்பேரவை தேர்தலையொட்டி, கட்சியின் தொலைநோக்கு பார்வைகளையும், மக்கள் நல திட்டங்களையும் உள்ளடக்கிய தேர்தல் அறிக்கையை தயாரிக்க நிபுணத்துவம் வாய்ந்த 7 பேர் கொண்ட குழுவை கட்சியின் தலைவர் அன்புமணி அமைத்துள்ளார்.
இக்குழுவுக்கு முன்னாள் எம்.பி. இரா.செந்தில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். குழுவின் உறுப்பினர்களாக முன்னாள் மத்திய இணை அமைச்சர் அரங்க வேலு, முன்னாள் எம்பி கோ.தன்ராஜ், கட்சியின் செய்தி தொடர்பாளர் கே.பாலு நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இவர்களுடன், தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் தலைவர் கோ.ஆலயமணி, பசுமை தாயகம் அமைப்பின் செயலாளர் இர.அருள் மற்றும் சமூக முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த கே.பொன்மலை ஆகியோரும் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். இந்தத் தயாரிப்புக் குழுவானது, தமிழகத்தின் பல்வேறு துறைகளைச் சார்ந்த வல்லுநர்கள், சமூக அமைப்புகள், தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடம் நேரடியாகக் கருத்துகளைக் கேட்டுப் பெறவுள்ளது.
பின்னர் அனைத்துத் தரப்பு மக்களின் எதிர்பார்ப்புகளையும் உள்ளடக்கிய வரைவு அறிக்கையை இக்குழுவினர் கட்சித் தலைமையிடம் சமர்ப்பிப்பார்கள். அதனைத் தொடர்ந்து, பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி தேர்தல் அறிக்கையை இறுதி செய்து அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.