

முதல்வர் ஸ்டாலின்
சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. ஆளுங்கட்சியான திமுக தனது தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. மாநாடுகள், பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம், தேர்தல் அறிக்கை தயாரிப்பு என களப் பணிகள் ஒருபுறம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், கூட்டணிக் கட்சிகள் உடனான தொகுதிப் பங்கீடு குறித்த அடுத்தகட்ட நகர்வுகளையும் திமுக மேற்கொண்டு வருகிறது.
தேர்தலில் போட்டியிடு வதற்கான விருப்பமனு விநியோகமும் இன்று (பிப்.20) தொடங்கி மார்ச் 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதுதவிர, திமுக சார்பில் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்ற பெயரில் பிப்.23-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை வீடு வீடாக பிரச்சாரம் நடத்தப்பட உள்ளது. இதுதொடர்பான மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (பிப்.20) மாலை 6.30 மணிக்கு காணொலி வாயிலாக நடைபெற உள்ளது.
திமுக ஆட்சியில் செய்யப்பட்ட மகளிர் நலத் திட்டங்கள் தொடர்பாக வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்வது மற்றும் தேர்தலுக்கான அடுத்தகட்ட பணிகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.