பாமக-வில் தந்தை - மகன் மோதலை வைத்து பலரும் பல கணக்கு போட்டுக் கொண்டிருக்க, நெய்வேலி தொகுதியை மையமாக வைத்து பாமக-வின் பழைய, புதிய பங்காளிகள் ஆளுக்கொரு திசையில் ஆவர்த்தனம் செய்துகொண்டு இருக்கிறார்கள்.
நெய்வேலி இப்போது திமுக வசம் இருக்கிறது. சிட்டிங் எம்எல்ஏ-வான சபா.ராஜேந்திரனே மூன்றாவது முறையாகவும் இங்கே போட்டியிடுவது உறுதி எனச் சொல்லப்படுகிறது. அதிமுக சார்பில் கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளரான சொரத்தூர் ராஜேந்திரன் இம்முறை நெய்வேலி நோக்கி வரலாம் என்கிறார்கள். அதேசமயம் இம்முறை நெய்வேலியை அதிமுக-விடம் நமக்காக கேட்க வேண்டும் என அன்புமணி விசுவாசிகள் அவருக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள். ராமதாஸ் தரப்பும் நெய்வேலி மீது ஒரு கண் வைத்திருக்கிறது. இதனால் ராமதாஸ் தரப்பும், அன்புமணி தரப்பும் நெய்வேலியில் நிஜப் பரீட்சையில் இறங்கவும் வாய்ப்பிருக்கிறது.
ராமதாஸ் தரப்பு பாமக மாவட்டச் செயலாளர் கோ.ஜெகன், 2021 தேர்தலில் அதிமுக கூட்டணியில் இங்கே போட்டியிட்டு பார்டரில் ஃபெயிலானவர். அதனால் இம்முறை, விட்டதைப் பிடிக்கும் விடாமுயற்சியோடு ஆயத்தமாகி வருகிறார். அவரிடம் பேசியபோது, “அய்யாவின் உத்தரவுக்காக காத்திருக்கிறேன். வாய்ப்புக் கிடைத்தால் எப்படியும் வென்று காட்டுவேன்” என்றார். இதேபோல் அன்புமணி தரப்பில் மண்ணின் மைந்தரான இயக்குநர் தங்கர் பச்சானின் பெயரை உச்சரிக்கிறார்கள். இதுபற்றி அவரிடமே கேட்டதற்கு, “நான் இதுவரை சீட் கேட்கவில்லை. அன்புமணி சொன்னால் போட்டியிடத் தயார்” என்று சொன்னார்.
இவரைத் தவிர, பாமக முன்னாள் எம்எல் ஏ-வான விருத்தாசலம் ஆர்.கோவிந்தசாமியும் அன்புமணியின் பரிசீலனையில் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் கோவிந்தசாமியிடம் இதுபற்றி கேட்டதற்கு, “ஒருமுறை எம்எல்ஏ-வாக இருந்து விட்டேன். படித்தவர்கள் அதிகம் உள்ள தொகுதி நெய்வேலி. நான் போட்டியிட்டால் வெற்றி பெறலாம். அன்புமணி எதையும் யோசிக்காமல் திட்டமிட மாட்டார்.
அதேசமயம், எனது உடல்நிலையையும் கவனிக்க வேண்டியிருப்பதால் குடும்பத்தினரையும் கலந்தாலோசிக்க வேண்டும்” என்றார். இவர்களைத் தவிர, கடலூர் வடக்குமாவட்ட பாமக செயலாளரான ரவிச்சந்திரனும், “சின்ன அய்யா மட்டுமல்ல... அண்ணி சவுமியாவின் ஆதரவும் எனக்கிருக்கிறது. அதனால் எனக்குத்தான் சீட் கன்ஃபார்ம்” என்கிறார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியினரும் நெய் வேலிக்காக காத்திருக்கிறார்கள். கடந்த முறை பண்ருட்டியில் வென்றஅக்கட்சியின் தலைவர் தி.வேல்முருகன், “இம்முறை நான் பண்ருட்டியில் போட்டியிட மாட்டேன்” என 2 மாதங்களுக்கு முன்பே டிக்ளர் செய்து விட்டார். அவரும் இம்முறை திமுக-விடம் நெய்வேலியைக் குறிவைத்துக் கேட்கலாம் என்கிறார்கள். அதற்கு முன்னதாகவே அவரது சகோதரர்கள் நெய்வேலிக்குள் இறங்கி தேர்தல் வேலைகளில் சுறுசுறுப்பாகி இருப்பதும் திராவிடக் கட்சிகளை திகைக்க வைத்திருக்கிறது.