புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் 9-ம் தேதி நடக்கிறது. ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி, எதிர்க்கட்சியான இண்டியா கூட்டணி, தவெக மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை களத்தில் உள்ளன.
கூட்டணி ஒப்பந்தத்தை மீறி இண்டியா கூட்டணியில் திமுகவை எதிர்த்து காங்கிரஸ் போட்டி வேட்பாளர்கள் 5 இடங்களில் போட்டியிடுகின்றனர். ஒரு தொகுதியில் விசிகவை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிடுகிறார்.
இதனால் பல இடங்களில் 4 முனைப் போட்டி, சில இடங்களில் 5 முனைப் போட்டி நிலவுகிறது. தனியாகக் கட்சி தொடங்கிய சிலர், சுயேச்சையாக களம் காணும் முக்கியஸ்தர்கள் என வெகு சில இடங்களில் பன்முனைப் போட்டியும் காணப்படுகிறது. வேட்பாளர்கள் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இந்தச் சூழலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களைஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள பிரதமர் மோடி நாளை(ஏப்.3) புதுச்சேரி வருகிறார். மாலை 4.15 மணிக்கு புதுச்சேரிவிமான நிலையம் வரும் பிரதமர்,அங்கிருந்து அஜந்தா சிக்னல் சந்திப்பு வந்து, அங்கிருந்து தொடங்கும் ‘ரோடு ஷோ’வில் பங்கேற்கிறார். அண்ணா சாலை வழியாக அண்ணா திடல் வரை 1.7 கி.மீ. தொலைவுக்கு இந்த ‘ரோடு ஷோ’ சுமார் 1 மணி நேரம் நடக்கிறது.
இதனால், சாலையோரம் இரும்பு தடுப்பு வைக்கப்பட்டு, கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமர் வரும் லாஸ்பேட் விமான நிலையம் தொடங்கி ரோடு ஷோ நடக்கும் பகுதி வரை தீவிர கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளது. பிரதமர் ‘ரோடு ஷோ’ செல்லும் வழியில் துணை ராணுவப் படையினர் நேற்று பாதுகாப்பு அணிவகுப்பை நடத்தினர்.
உதயநிதி பிரச்சாரம்: 3-ம் தேதி காலையில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் புதுச்சேரியில் 'ரோடு ஷோ' நடத்துகிறார். மரப்பாலம், வில்லியனூர் உள்ளிட்ட 3 இடங்களில் அவர் பேசுகிறார்.