சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் பூந்தமல்லி - வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் சேவையை வரும் அக்.11-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
இந்த விழாவில் ஆளுநர் அர்லேகர், முதல்வர் விஜய் பங்கேற்கின்றனர். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முதல்கட்டமாக சென்ட்ரல் முதல் பரங்கிமலை, விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை என இரண்டு வழித்தடத்தில் 55 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில்களை இயக்கி வருகிறது.
மெட்ரோ ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இதையடுத்து, 2-ம் கட்டமாக ரூ.63 ஆயிரத்து 246 கோடி மதிப்பில், 118.9 கி.மீ. தொலைவில் மாதவரம் முதல் சிப்காட் வரை (3-வது வழித்தடம்), கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரை (4-வது வழித்தடம்), மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை (5-வது வழித்தடம்) புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது.
கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி புறவழிச்சாலை வரையிலான 4-வது வழித்தடத்தில் பூந்தமல்லி - வடபழனி இடையே கட்டுமானப் பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் நிறைவடைந்தது, 14.64 கி.மீ தூரம் கொண்ட இந்த பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்து கடந்த மே மாதம் பயணிகளுக்கான ரயிலை இயக்கலாம் என்று பாதுகாப்பு சான்றிதழ் வழங்கினார்.
ஆனாலும், இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்குவது தாமதமாகி வந்தது. பூந்தமல்லி - வடபழனி இடையே எப்போது தொடங்கப்படும் என மக்கள் எதிர்பார்த்திருந்தனர்.
இந்நிலையில், பூந்தமல்லி - வடபழனி இடையேயான மெட்ரோ ரயில் சேவையை வரும் அக்.11-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேவையை தொடங்கி வைத்து மெட்ரோ ரயிலில் போரூர் வரை பிரதமர் பயணம் மேற்கொள்ள உள்ளார். தொடர்ந்து சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் வேலூர் விமான நிலையம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
புதிய திட்டப்பணிகளுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிகழ்ச்சிகளில் ஆளுநர் ஆர்.வி.அர்லேகர், முதல்வர் விஜய் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். பூந்தமல்லி - வடபழனி வழித்தடத்தில் முதல்கட்டமாக 10 நிமிட இடைவெளியில் ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வடபழனி - போரூர் இடையே சாலிகிராமம் மற்றும் ஆலப்பாக்கம் ரயில் நிலையங்களின் கட்டுமான பணிகள் நிறைவு பெறாததால் அந்த நிலையங்களில் ரயில்கள் நிற்காது.