சென்னை: தமிழகத்தில் ரூ.378 கோடியில் 8 அம்ரித் பாரத் நிலையங்கள் திறப்பு மற்றும் கடற்கரை - எழும்பூர் 4-வது பாதை நாட்டுக்கு அர்ப்பணிப்பு ஆகிய ரயில் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடி, மதுரையில் பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களை நேற்று தொடங்கி வைத்தார். இவற்றில், ரயில்வே துறையில் ரூ.378 கோடி மதிப்பில், மேம்படுத்தப்பட்ட 8 அம்ரித் பாரத் ரயில் நிலையங்களை திறந்து வைத்தார். சென்னை எழும்பூர் - கடற்கரை 4-வது ரயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், மேம்படுத்தப்பட்ட பொம்மிடி, காரைக்குடி, மணப்பாறை, மொரப்பூர், பொள்ளாச்சி, சோழவந்தான், வில்லிபுத்தூர், திருவாரூர் ஆகிய 8 ரயில் நிலையங்களை திறந்து வைத்தார்.
பொம்மிடி ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய ரயில்வே மற்றும் ஜல் சக்தித் துறை இணையமைச்சர் வி. சோமண்ணா, மூத்த ரயில்வே அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்றர்.
இந்த 8 ரயில் நிலையங்கள் ரூ.105 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்த ரயில் நிலையங்களில் நடைமேடைகள், காத்திருப்போர் அறை, கழிவறைகள் ஆகியவை மேம்படுத்தப்பட்டுள்ளன.
மின்தூக்கி, நகரும் படிக்கட்டு, பார்க்கிங் வசதி, பயணிகள் தகவல் அமைப்பு உள்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 4.3 கி.மீ. தொலைவில் சென்னை கடற்கரை - எழும்பூர் 4-வது பாதை நாட்டுக்கு பிரதமர் அர்ப்பணித்தார்.
இப்பாதை ரூ.273 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. இப்பாதை மூலமாக, கூடுதலாக பயணிகள் மற்றும் சரக்கு சேவைகள் வழங்க முடியும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.