சென்னை: விஐடி சென்னையின் ஸ்டார்ட்-அப் நிறுவனமான ‘மெட்க்ஸ் ஏஐ இன்னோவேஷன்ஸ்’ (MEDxAI Innovations), மருத்துவத் துறையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் குவான்டம் கணக்கீட்டு நுண்ணறிவு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகிறது.
இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் விஐடி சென்னை பேராசிரியருமான ஷீனா சி.பிரவின் கடந்த 11-ம் தேதி சென்னை போரூர் - பூந்தமல்லி மெட்ரோ ரயில் திட்ட தொடக்க விழாவில், பிரதமர் மோடி, முதல்வர் விஜய் ஆகியோரிடம் தங்களது ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் புதிய கண்டுப்பிடிப்புகளை அறிமுகப்படுத்தினார்.
செர்விலென்ஸ் (Cervilens) என்ற செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஆரம்பநிலை பரிசோதனைக் கருவி, குவான்டம் ஃபார்ம் எக்ஸ் (Quantum PharmX) என்ற செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கணினிவழி மருந்து கண்டுபிடிப்புத் தளம் ஆகிய இரு தொழில்நுட்பத் தயாரிப்புகளையும் ஷீனா விளக்கிக் கூறினார்.
அதை ஆர்வத்துடன் கேட்ட பிரதமரும், முதல்வரும் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர். “எதிர்வரும் காலங்களில் மருத்துவத் துறையில் ஏஐ பங்களிப்பு அதிக அளவில் இருக்கும். எனவே, இவை குறித்து தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும்” என்று பிரதமர் மோடி அறிவுரை வழங்கினார்.
விஐடி சென்னையில் உருவாக்கப்பட்டுள்ள மெட்க்ஸ் ஏஐ இன்னோவேஷன்ஸ் மருத்துவத் தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனம், மருத்துவப் பரிசோதனை மற்றும் அடுத்த தலைமுறை மருந்து கண்டுபிடிப்புத் துறைகளுக்கான செயற்கை நுண்ணறிவு மற்றும் குவான்டம் கணக்கீட்டு நுண்ணறிவுத் தீர்வுகளை உருவாக்குவதில் தீவிர கவனம் செலுத்தும் என விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன், விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.