மதுரை: மதுரை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் அரசு பள்ளிகளில் சேதமடைந்த கட்டிடங்களை பழுது பார்க்கவும், புதிய கட்டிடங்களை கட்டக்கோரிய வழக்கில், அரசு பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்ய உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை வல்லாதிரக்கோட்டையைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “விருதுநகர், திருச்சி, நெல்லை, திண்டுக்கல், கரூர், தஞ்சை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, தேனி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட 12 மாவட்ட அரசு பள்ளி கட்டிடங்க சேதங்கள், தேவைகள் தொடர்பாக தகவலறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி எழுப்பிய போது, பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் கட்டிடங்களில் சேதம் இருப்பது உறுதியாகி உள்ளது.
வகுப்பறை, சமையலறை, கழிவறை, சுற்றுச்சுவர், குடிநீர் வசதி போன்றவை பல பள்ளிகளுக்கு தேவையாக உள்ளன. பள்ளிக் கட்டிடங்கள் மற்றும் சுற்றுச்சுவர் சேதமடைந்த நிலையில் இருப்பதால் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து உள்ளது. மாவட்ட கல்வி அலுவலர்கள் பள்ளிகளை அவ்வப்போது ஆய்வு செய்து அவை தரமானதாகவும் சுத்தமானதாகவும் இருப்பதை உறுதி செய்திருக்க வேண்டும்.
பருவ மழை தொடங்க உள்ள நிலையில் சேதம் அடைந்த பள்ளிகளை உடனடியாக சரி செய்வதோடு முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும், அடிப்படை வசதிகளையும் முன்னெடுப்பது அவசியம். எனவே சேதமடைந்த மற்றும் பயன்பாட்டிற்கு தகுதியற்ற பள்ளி கட்டிடங்கள், கழிப்பறைகள், சமையலறைக் கட்டிடங்கள், சுற்றுச்சுவர் மற்றும் அங்கன்வாடி கட்டிடங்களை பழுது பார்க்கவும், இடிக்கப்பட்டு அகற்றப்பட வேண்டிய கட்டிடங்களுக்கு மாற்றாக புதிய கட்டிடங்களை கட்டவும், மாணவர்களுக்கு தேவையான கூடுதல் பள்ளி கட்டிடங்கள், கழிப்பறை, சமையலறை, சுற்றுச்சுவர் போன்றவற்றை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கட்டி முடிக்கவும் உத்தரவிட வேண்டும்” இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு, "தென் மண்டலத்தில் உள்ள 12 மாவட்ட தலைமை கல்வி அலுவலர்கள், தங்களது கட்டுப்பாட்டில் உள்ள ஒவ்வொரு பள்ளியையும் மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் நேரடியாக ஆய்வு செய்ய அறிவுறுத்த வேண்டும். மேலும், சுகாதாரம், தூய்மை மற்றும் பிற அடிப்படை வசதிகள் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் இருந்து அறிக்கைகளை பெற்று அவற்றை தொகுத்து தலைமை கல்வி அலுவலர்கள் நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.
குறிப்பாக குடிநீர், வடிகால் வசதி, பள்ளியை சுற்றி புதர்கள் அல்லது களைகள் உள்ளனவா ? என்பன தொடர்பான விபரங்களும் தெளிவாக அறிக்கையில் தெரிவிக்கப்பட வேண்டும். ஆகஸ்ட் 24ம் தேதிக்குள்ளாக இந்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். கண்டறியப்படும் குறைபாடுகளில் உடனே சரி செய்யப்பட வேண்டிய தேவை இருப்பின், நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்காமல் தலைமை கல்வி அலுவலர்கள் தேவையான பணிகளை மேற்கொண்டு அவற்றை சரி செய்து அது தொடர்பான அறிக்கையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
பள்ளிகளை தூய்மையாக பராமரிக்க தற்காலிக தூய்மை பணியாளர்களை நியமிக்க சாத்திய கூறுகள் உள்ளதா? என்பது குறித்தும் தமிழக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று கூறிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.