புதுடெல்லி: சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையையொட்டிய பகுதியில் தமிழக அரசின் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காகப் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரி மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
வழக்கறிஞர் ஜெய்சுகின் மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில், சென்னையில் பட்டினப்பாக்கம் கடற்கரையையொட்டி 25 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்குத் தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக அரசு 10.98 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையில் உள்ள நிலையில், தமிழகத்தில் தற்போது பொருளாதார வளர்ச்சி இல்லாத சூழலில், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பிரச்சினைகள் இருக்கும்போதும் 1200 கோடி ரூபாய் செலவில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது மாநிலத்தின் நிதி நிலையைக் கடுமையாகப் பாதிப்பதோடு, தமிழகம் மீண்டும் மீண்டும் கடனில் மூழ்கும் சூழலை ஏற்படுத்தும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தலைமைச் செயலகம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள பட்டினப்பாக்கம் பகுதி அரிய வகை ஆமைகள் வழக்கமாக முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டல பகுதியாகும். இத்தகைய மண்டலத்தில் பிரம்மாண்டமான கான்க்ரீட் கட்டுமானங்களை மேற்கொள்வது கடல்சார் பல்லுயிர் பெருக்கத்தை மிக மோசமாகப் பாதிக்கும் என மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
அதுபோல, பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதி மீனவர்கள் அதிகமாக வாழும் இடமாகும், அப்பகுதியில் தான் அவர்களின் வாழ்வாதாரமும் உள்ளது. இந்த சூழலில் பட்டினப்பாக்கத்தில் 25 ஏக்கர் நிலத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது மீனவர்களை கடுமையாக பாதிக்கும். ஏற்கனவே புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கான அறிவிப்பு வெளியான நாளிலிருந்து பட்டினப்பாக்கம் மற்றும் சீனிவாசபுரம் ஆகிய மீனவ கிராமங்களை சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தமிழகத்தின் நிதிநிலை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மீனவர்களின் வாழ்வாதாரம் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு,பட்டினப்பாக்கத்தில் ரூ.1200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கான அரசாணையை முற்றிலும் ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
திமுக வழக்கு: பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து திமுக தரப்பில் உயர் நீதிமன்றத்தி்ல் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தொடர்பான அரசாணையை ரத்து செய்யக்கோரியும், அந்த அரசாணைக்கு தடை விதிக்கக்கோரியும் திமுக முன்னாள் எம்எல்ஏ-வான மயிலாப்பூர் வேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதில், ‘‘பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையில், சுற்றுச்சூழல்துறை, தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம், மீன்வளத்துறை உள்ளிட்ட துறைகளின் சார்பில் ஒப்புதல் பெறப்பட்டது தொடர்பாக எந்த குறிப்பும் இல்லை.
அரசு நிதி நெருக்கடியில் இருப்பதாக அறிவித்துள்ள நிலையில் ரூ. 1,200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணை தன்னிச்சையானது. எனவே இதுதொடர்பான அரசாணைக்கு தடை விதித்து, அதை ரத்து செய்ய வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.