சென்னை: மாநகர போக்குவரத்தை மேம்படுத்த ரூ.530 கோடியில் செயல்படுத்தப்படும் சென்னை நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பு திட்டத்தை ஆகஸ்ட் மாதத்துக்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு நகராட்சி நிர்வாகத் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகர போக்குவரத்தை மேம்படுத்த மாநகராட்சி சார்பில், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை (ஜைக்கா) நிதியுதவியுடன் சென்னை நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பு (Intelligent Transport System - ITS) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ரூ.530 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் இத்திட்டம், மேம்பட்ட நுண்ணறிவு போக்குவரத்து தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி போக்குவ ரத்து மேலாண்மையை வலுப்படுத்துதல், சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் பொதுப்போக்குவரத்து சேவைகளை நவீனமயமாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இத்திட்டம், மாநகர போக்குவரத்து காவல் துறைக்கான, போக்குவரத்து தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பு, மாநகர் போக்குவரத்துக் கழகத்துக்கான நகரப் பேருந்து அமைப்பு ஆகிய 2 முக்கிய கூறுகளை கொண்டுள்ளது.
இதன்கீழ், 165 இடங்களில் போக்குவரத்து நிலைமைக்கு ஏற்ப செயல்படும் சிக்னல்கள், 50 இடங்களில் சிவப்பு விளக்கு மீறல் கண்டறிதல் அமைப்பு, 10 இடங்களில் வேக வரம்பு மீறல் கண்டறிதல் அமைப்பு, 58 இடங்களில் போக்குவரத்து விபத்து சம்பவம் கண்டறிதல் அமைப்பு, 115 இடங்களில் போக்குவரத்து நெரிசலை அறிய உதவும் தானியங்கி வாகன எண்ணிக்கை மற்றும் வகைப்பாடு கருவி நிறுவும்பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவை அனைத்தும் சென்னை போக்குவரத்து காவல் துறையின் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் மூலம் இயக்கப்படும். மேலும் போக்குவரத்து நிலவரம் குறித்த தகவல்களை வழங்கும் தகவல் பலகைகள் 13 இடங்களில் அமைக்கப்படும். இவை சென்னை மாநகர போக்குவரத்துக் கழக கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து இயக்கப்படும்.
பேருந்துகளின் இருப்பிடத்தைக் கண்டறிய 3,500 பேருந்துகளில் உபகரணங்கள் பொருத்தப்பட உள்ளன. பேருந்துகளின் வருகை நேரத்தைக் காட்டும் பயணிகள் தகவல் பலகைகள் 616 பேருந்து நிறுத்தங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன. 32 இடங்களில் பேருந்து பணிமனை செயல்பாடுகளை மேம்படுத்தும் பணிமனை மேலாண்மை அமைப்புகளும் நிறுவப்பட்டு வருகின்றன.
இப்பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி நேற்று நேரில் பார்வையிட்டார். அப்போது இத்திட்டத்தின் அனைத்து கூறுகளும் ஆகஸ்ட் மாதத்துக்குள் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்த பின், பயண நேரம் மற்றும் காத்திருப்பு நேரம் குறையும், போக்குவரத்து சீரடையும். தானியங்கி விதிமுறை அமலாக்கம் மூலம் சாலைப் பாதுகாப்பு மேம்படும், பொதுப் போக்குவரத்து சேவைகளின் நம்பகத்தன்மை அதிகரிக்கும்.
இந்த ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன், இணை ஆணையர்கள் வீ.ப.ஜெயசீலன் (சுகாதாரம்), செ.சரவணன் (பணிகள்), மத்திய வட்டார துணை ஆணையர் எச்.ஆர்.கவுஷிக் ஆகியோர் உடனிருந்தனர்.