ஓசூர் அருகே பாகலூரில் உள்ள பசுமைக் குடிலில் அறுவடைக்கு தயாராக உள்ள வெள்ளை ரோஜாக்கள்.

 
தமிழகம்

கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக ஓசூரில் இருந்து தினசரி கேரளாவுக்கு 2 லட்சம் ரோஜா மலரை அனுப்ப திட்டம்

கி.ஜெயகாந்தன்

ஓசூர்: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஓசூரிலிருந்து கேரளாவுக்கு தினசரி வெள்ளை ரோஜா உள்ளிட்ட 2 லட்சம் மலர்களை அனுப்ப விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தளி, கெலமங்கலம், பேரிகை, பாகலூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை மற்றும் மண் வளம் மலர் சாகுபடிக்கு கை கொடுத்து வருகிறது.

ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் இதை யொட்டி நடைபெறும் திருமண விழாவுக்காக கேரள மாநிலத்தில் வெள்ளை ரோஜாவுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். இதனால், ஓசூரிலிருந்து கேரளாவுக்கு ஆண்டுதோறும் 20 லட்சம் வெள்ளை ரோஜாக்கள் விற்பனைக்கு செல்கின்றன.

இதுதொடர்பாக விவசாயிகள் சிலர் கூறியதாவது: ஓசூர் பகுதியிலிருந்து ஆண்டு தோறும் கேரளாவுக்கு ஓணம் பண்டிகையின்போது வெள்ளை சாமந்திப்பூ, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெள்ளை ரோஜா அதிக அளவில் விற்பனைக்குச் செல்லும்.

இந்தாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் அதை யொட்டி நடைபெறும் திருமண விழாக்களுக்காக பசுமைக் குடில்களில் 500 ஏக்கரில் வெள்ளை ரோஜாவும், 1,000 ஏக்கரில் கலர் ரோஜாவும் சாகுபடி செய்துள்ளோம்.

குறிப்பாக வெளிநாடுகளில் வசிக்கும் கேரள கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை விடுமுறைக்கு தங்கள் சொந்த ஊருக்கு வருகின்றனர். பண்டிகை மறுநாள் முதல் ஜனவரி 10-ம் தேதிவரை அதிக கிறிஸ்தவ திருமணங்கள் நடக்கும்.

இதனால், அங்குள்ள சந்தைகளில் வெள்ளை ரோஜாவுக்கு வரவேற்பு அதிகம் இருக்கும். இந்த ஆண்டு ஆர்டரின் பேரில் வரும் 20-ம் தேதி முதல் தினசரி வெள்ளை ரோஜா, மேடை அலங்காரத்துக்கு வெள்ளை ஜாபரா, மலர் கொத்துக்கு வெள்ளை ஜிப்சோபிலா உள்ளிட்ட 2 லட்சம் மலர்கள் அனுப்ப திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT