ராமேசுவரத்தில் ஹனுமன் சிலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. (அடுத்த படம்) அங்கு அமைய உள்ள ஹனுமன் சிலையின் மாதிரி வடிவம்.
ராமேசுவரம்: நாட்டின் 4 திசைகளிலும் ஹனுமன் சிலை அமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, ராமேசுவரத்தில் 108 அடி உயர சிலை அமைக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகின்றன.
நாட்டின் 4 திசைகளில் 108 அடி உயர ஹனுமன் சிலை அமைக்கும் திட்டம், 2008-ம் ஆண்டு ஹெச்சி நந்தா அறக்கட்டளை அறங்காவலரும், அனுமன் பக்தருமான நிகில் நந்தா (49) என்பவரால் தொடங்கப்பட்டது. இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள சிம்லா நகரின் புறநகர் பகுதியான ஜக்கு மலையில்தான் முதல்
சிலை அமைக்கும் பணி 2008-ல் தொடங்கப்பட்டது. இப்பணி முடிந்து 2010-ல் சிலை திறக்கப்பட்டது. குஜராத்தின் மோர்பி என்ற இடத்தில் உள்ள பரமபூஜ்ய பாபு கேஷ்வானந்த் ஆசிரமத்தில் 2-வது சிலை அமைக்கும் பணி கடந்த 2018-ல் தொடங்கியது.
இந்த 108 அடி உயர ஹனுமன் சிலையை 2022-ல் காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அப்போது பிரதமர் மோடி பேசும்போது, “வலிமை, தைரியம், கட்டுப்பாடு ஆகியவற்றின் உருவமாக ஹனுமன் திகழ்கிறார்.
நாட்டின் நான்கு திசைகளிலும், ஹனுமன் சிலை அமைக்கும் திட்டத்தில் 3-வது சிலை அமைக்கும் பணி ராமேசுவரத்தில் தொடங்கப்பட உள்ளது. 4-வது சிலை மேற்கு வங்கத்தில் அமைக்கப்படும்” என்றார்.
ராமாயண முக்கியத்துவம் வாய்ந்த இடம் என்பதால், ராமேசுவரத்தில் ஹெச்சி நந்தா அறக்கட்டளை சிலை அமைத்து வருகிறது.
2022 பிப்ரவரியில் ராமேசுவரம் ஓலைக்குடா கடற்கரை அருகே ரூ.83 கோடி மதிப்பில் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
தற்போது பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. ஹனுமன் இலங்கையைப் பார்ப்பதுபோல சிலை அமைக்கப்பட்டு வருகிறது.
வரும் பிப்ரவரிக்குள் சிலையை அமைக்கும் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளதாக அந்த அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.