பியூஷ் கோயல் | கோப்புப் படம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியுடன் பேச்சு நடத்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று சென்னை வருகிறார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் தொகுதிப் பங்கீடு இன்னும் இறுதியாகவில்லை. கடந்த 19-ம் தேதி டெல்லி சென்ற அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். பாமக தலைவர் அன்புமணியும் டெல்லி சென்று ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் இன்று (23-ம் தேதி) சென்னை வருகிறார். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியை சந்தித்து, தொகுதிப் பங்கீடு தொடர்பான இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார். கூட்டணித் தலைவர்களையும் பியூஷ் கோயல் சந்தித்துப் பேச உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சுமார் 170 தொகுதிகளில் போட்டியிட அதிமுக திட்டமிட்டுள்ளது. எஞ்சிய இடங்களை மட்டுமே கூட்டணிக் கட்சிகளுக்குப் பகிர்ந்து அளிக்க முடியும் என்பதில் கட்சித் தலைமை மிகவும் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது. அதேவேளையில், பாஜக தரப்பில் 30 தொகுதிகள் வரை கோரப்படுவதால், எந்தெந்தத் தொகுதிகளைப் பகிர்ந்து கொள்வது என்பதில் கடந்த சில நாட்களாக விவாதங்கள் நீடித்து வந்தன.
குறிப்பாக, சென்னை மாநகரின் ‘நட்சத்திர’ தொகுதிகளான மயிலாப்பூர், வேளச்சேரி மற்றும் தியாகராய நகர் ஆகிய இடங்களைப் பெறுவதில் பாஜக தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. இந்நிலையில், பியூஷ் கோயலின் இன்றைய சென்னை வருகை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஏற்கனவே அதிமுகவின் மூத்த தலைவர்கள் அடங்கிய குழு, பாமக மற்றும் தமாகா உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுடன் முதற்கட்டப் பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டது.
கூட்டணித் தலைவர்களுடன் பியூஷ் கோயல் நடத்தும் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இன்று இரவு அல்லது நாளை மாலைக்குள் அதிகாரப்பூர்வ தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது. தொகுதிப் பங்கீடு இறுதியான கையோடு, வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு மற்றும் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரங்கள் தொடங்க தேசிய ஜனநாயகக் கூட்டணி திட்டமிட்டுள்ளது.