புதுடெல்லி: மின்மாற்றிகள் கொள்முதல் செய்யப்பட்டதில் அரசுக்கு ரூ. 397 கோடி வரை இழப்பு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட விவகாரத்தில் எம்எல்ஏ செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிரான சிபிஐ விசாரணையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 2021-23 காலகட்டத்தில் சுமார் 45 ஆயிரம் மின் மாற்றிகளை கொள்முதல் செய்ததன் மூலம் அரசுக்கு ரூ. 397 கோடி வரை இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும், எனவே இதற்கு காரணமான முன்னாள் மின்வாரிய அமைச்சரும், தற்போதைய கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ-வுமான செந்தில் பாலாஜி, டான்ஜெட்கோ முன்னாள் தலைவரான ராஜேஷ் லக்கானி, மின்வாரிய கொள்முதல் பிரிவு நிதி கட்டுப்பாட்டாளரான வி.காசி ஆகியோர் மீதான குற்றச்சாட்டு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை முறையாக விசாரணை நடத்தவில்லை. எனவே இதுதொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழு அல்லது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
அந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, கடந்த ஏப்.29 அன்று சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிரான புகார்கள் மீது சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து மின்வாரிய முன்னாள் தலைவர் ராஜேஷ் லக்கானி, கொள்முதல் பிரிவு நிதி கட்டுப்பாட்டாளர் வி.காசி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடந்தது.
அப்போது வி.காசி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் தவே, ‘‘இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரப்படவில்லை.
இருப்பினும் சென்னை உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. அரசியல் உள்நோக்கத்துடன் இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தி்ல் தாக்கல் செய்யப்பட்டது’’ என்றார்.
இந்த வாதத்தை நிராகரித்த நீதிபதிகள், ‘‘சிபிஐ விசாரணை வேண்டும் என கோரப்படாவிட்டாலும் தேவைப்படும் பட்சத்தில் சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றமே உத்தரவிட முடியும். இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. இருந்தபோதும் சிபிஐ சுதந்திரமான விசாரணையை மேற்கொள்ள வேண்டும்’’ எனக்கூறி காசி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.
அப்போது டான்ஜெட்கோ முன்னாள் தலைவர் ராஜேஷ் லக்கானி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் டி.எஸ்.நாயுடு, தங்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற்றுக்கொள்வதாக தெரிவித்தார். அதையேற்ற நீதிபதிகள், அந்த மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.