தமிழகம்

அமைச்சர் பிரபு குற்றச்சாட்டு விவகாரம்: ஓய்வுபெற்ற நீதிபதி விசாரணை கோரிய மனு தள்ளுபடி

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: திமுக ஆட்சியில் கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டதாக அமைச்சர் பிரபு கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

முந்தைய திமுக ஆட்சியில் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதாகவும், இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டதாகவும், அதற்கு ஆதாரங்கள் உள்ளதாகவும் தமிழக சட்டமன்றத்தில் கனிமவளத் துறை அமைச்சர் டி.கே பிரபு குற்றம்சாட்டியிருந்தார்.

அமைச்சரின் குற்றச்சாட்டு அடிப்படையில் கனிம வள கொள்ளை குறித்து உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி, விழும்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரை சேர்ந்த வழக்கறிஞர் ராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதில், “விசாரணை கோரி தமிழக தலைமை செயலாளருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் கோரிக்கை மனு அளித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை” எனக் கூறியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள்முருகன் அமர்வு, “எந்த இடத்தில் சட்டவிரோதமாக கனிம வளங்கள் எடுக்கப்பட்டன? எங்கு விசாரணை நடத்த வேண்டும்? என எந்த விவரங்களும் இல்லாமல், தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த பொதுநல வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என எச்சரித்தது.

மேலும், சட்டமன்றத்தில் நடந்த விஷயம் தொடர்பாக, நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியுமா? இந்த மனு விசாரணைக்கு உகந்ததா? எங்கு சட்டவிரோதமாக கனிம வளங்கள் எடுக்கப்பட்டன? என ஒரு உதாரணத்தைக் காட்டினால், விசாரணைக்கு உத்தரவிட தயாராக இருப்பதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

இதற்கு மனுதாரர் தரப்பில் உரிய பதில் அளிக்கப்படாததை அடுத்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT