சென்னை: தமிழகத்தில் உள்ள 44 தனித் தொகுதிகளில் கிறிஸ்தவர்களாக மதம் மாறியவர்கள் போட்டியிட தடை விதிக்கக் கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.23-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், தனித் தொகுதிகள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது: தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளில் 44 தொகுதிகள் தனித் தொகுதிகளாக அறிவிக்கப்பட்டு, பழங்குடியின, பட்டியலின மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்து, சீக்கிய, புத்த மதங்களைப் பின்பற்றுபவர்கள் மட்டுமே பழங்குடியினர், பட்டியல் இனத்தவர் என அரசியலமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால், மேற்கண்ட 44 தனித் தொகுதிகளில் கிறிஸ்தவர்களாக மதம் மாறிய பட்டியலினத்தவர்தான் 90 சதவீதம் போட்டியிடுகின்றனர்.
எனவே, அதற்கு தடை விதிக்க வேண்டும். தனித் தொகுதிகளில் இந்து, சீக்கிய, புத்த மதத்தினரை மட்டுமே போட்டியிட அனுமதிக்க வேண்டும். கிறிஸ்தவராக மதம் மாறியவர்கள் போட்டியிட அனுமதிக்கக் கூடாது.
அவசர வழக்கு
முக்கியமாக, வேட்புமனு பரிசீலனையின்போது அரசியல் சாசனம் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில் இந்த விவகாரத்தை தீவிரமாக ஆய்வு செய்யவும், இது தொடர்பாக தேர்தல் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை பிறப்பிக்கவும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கோரியுள்ளார்.
தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள் முருகன் அமர்வில் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் எஸ். கார்த்திகை பாலன் நேற்று ஆஜராகி, இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி முறையீடு செய்தார். இதை பரிசீலித்த நீதிபதிகள், இந்த வழக்கு 7-ம் தேதி (இன்று) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளனர்.