தமிழகம்

விளாத்திக்குளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனின் வெற்றிக்கு எதிரான மனு தள்ளுபடி

ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, திரும்ப பெறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட மார்க்கண்டேயன் வெற்றி பெற்றார். இந்நிலையில், அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி விளாத்திக்குளம் தொகுதி வாக்காளர் விமலாதேவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அதில், மார்கண்டேயன் தனது மனைவி பெயரில் வாங்கிய சொத்து விவரங்களை வேட்புமனுவில் குறிப்பிடவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிகளின்படி இது குற்றம் என்பதால் அவரை பதவியில் இருந்து நீக்கக் கோரி தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் ஆளுநருக்கு மனு அளித்ததாகவும், அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, வழக்கை திரும்ப பெற்று தேர்தல் வழக்காக தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டுமென மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

குறிப்பிட்ட காலவரம்புக்குள் தான் தேர்தல் வழக்கை தாக்கல் செய்ய முடியும் என்ற நிலை இருக்கும்போது, தேர்தல் வழக்கு தாக்கல் செய்ய நாங்கள் எப்படி அனுமதி வழங்க முடியும்? சட்டத்தை வளைக்க பார்க்கிறீர்களா? கடுமையான அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரித்த நீதிபதிகள், மனுவை திரும்ப பெற அனுமதித்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT