தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவுடன் தமிழகம் முழுவதும் ஆதரவு திரட்ட பெருந்தலைவர் மக்கள் கட்சி முடிவு செய்திருப்பதாக அக்கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அடுத்த மாதம் நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில் கே.பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவுடன் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து ஆதரவு திரட்டுவது என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி மற்றும் தமிழக நாடார் பேரவை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் நாடார் சமுதாய மக்கள் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாகவும், தென் மாவட்டங்களில் அடர்த்தியாகவும் வாழ்ந்து வருகின்றனர். ஒவ்வொரு தொகுதியிலும் அரசியல் கட்சிகளின் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்யக்கூடிய இடத்தில் நாடார் சமுதாய மக்கள் இருக்கின்றனர்.
அவர்களை ஒன்றிணைத்து பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றிவாகை சூடும் வகையில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்து, நாடார் சமுதாய மக்களை ஓரணியில் திரட்டி, தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்கு பாடுபடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.