சென்னை: தமிழகம் முழுவதும் 128 இடங்களில் ஆர்எஸ்எஸ் சார்பில் அக்.25 மற்றும் நவ.1 ஆகிய தேதிகளில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிறுவன தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 128 இடங்களில் அக்.18, அக்.25, நவ.1 ஆகிய நாட்களில் ஏதேனும் ஒருநாளில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதிக்க கோரி ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாநிலச் செயலாளர் ஜெகதீசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘அக்.25, நவ.1 ஆகிய தேதிகளில் அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்கப்படும்’ என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஏற்கெனவே உயர் நீதிமன்றம் வகுத்த விதிமுறைகள் கடைபிடிக்கப்படும் என ஆர்எஸ்எஸ் தரப்பிலும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
அதை பதிவு செய்துகொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு ஆண்டும் ஆர்எஸ்எஸ் சார்பில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரி நீதிமன்றத்தை நாட வேண்டிய சூழல் உள்ளது. இனியும் அதுபோன்ற சூழல் ஏற்படக் கூடாது. ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் அதைத் தொடர்ந்து நடத்தப்படும் பொதுக்கூட்டங்களுக்கு போலீஸார் அக்.19-க்குள் அனுமதி வழங்க வேண்டும். அதேபோல, உயர் நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகளை ஆர்எஸ்எஸ் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.
தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணிக்கு அனுமதி மறுத்து கடந்த 2023-ல் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை பின்னர், உச்ச நீதிமன்றம் ரத்து செய்து அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து அப்போதைய மாநில அரசு மேல்முறையீடு செய்தது. இதை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அந்த ஆண்டு 45 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்தியது குறிப்பிடத்தக்கது.