

சென்னை: குழந்தைகளைப் பயன்படுத்தி தவெகவினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது மலிவான அரசியல் உள்நோக்கம் கொண்டது. ரசனை குறைந்தது. பெற்றோரின் மோசமான வளர்ப்பு முறையையே இது காட்டுகிறது என கருத்து தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், தற்போதைய சூழலில் தேர்தல் வெற்றியை ரத்து செய்ய அதை ஒரு காரணமாக கருத முடியாது எனவும் இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதித்து முடிவு எடுக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளது.
சேலம் வடக்கு தொகுதி தவெக எம்எல்ஏ சிவக்குமாரின் தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி திமுக வேட்பாளர் ராஜேந்திரன் உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் குழந்தைகளை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுத்தி அவர்கள் மூலமாக வீட்டில் உள்ள பெரியவர்களிடம் முதல்வர் விஜய் தனக்கு வாக்களிக்கும்படி கோரியது சட்டவிரோதம் என்பதால், சிவக்குமார் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க கோரியிருந்தார்.
இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி சிவக்குமார் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி, தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவு:
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தவெக தலைவரும், முதல்வருமான விஜய், கடந்த ஏப்.21 அன்று சென்னையில் நடந்தக் கூட்டத்தில் பேசும்போது, குழந்தைகள் தங்களது பெற்றோரையும் குடும்ப உறுப்பினர்களையும் தவெகவுக்கு வாக்களிக்கும்படி அடம்பிடித்து நிர்பந்திக்க வேண்டுமென மறைமுக அழுத்தம் கொடுத்து, அதன்மூலம் வெற்றி பெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குடும்பத்தில் குழந்தைகளின் தாக்கம் என்பது அரசியல் தேர்வில் முக்கிய பங்காற்றியதா என்பது விவாதப்பொருளாக உள்ளது. பெற்றோர் தங்களது குழந்தைகளை எவ்வாறு பாதிக்கின்றனரோ அதேபோல குழந்தைகளும் பெரியவர்களை பாதிக்கின்றனர். இது இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்திலும் நடைமுறையில் உள்ள உண்மை.
குழந்தைகளை தெய்வங்கள் மற்றும் முன்னோரின் மறு பிறவியாக கருதும் மனோபாவம் நம்மிடம் உள்ளது. எனவே குழந்தைகளின் சொல்லுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இந்து புராணங்களின்படி முருகப்பெருமான் சிறு வயதிலேயே சிவ பெருமானுக்கு ‘பிரணவ மந்திரத்தை உபதேசித்துள்ளார். அதேபோல அவ்வைக்கும் ஞானம் போதித்த கதைகளும் நம்மிடம் பிரபலம். பெற்றோரின் முடிவில் குழந்தைகள் ஒருவிதமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர் என வாதிட்டாலும், இந்த வழக்கில் ஒரு கட்சியின் தலைவர் வீட்டில் உள்ள பெரியவர்கள் தனக்கு வாக்களிக்கும்படி குழந்தைகள் மூலமாக பிரசாரத்தில் ஈடுபட்டது, வீடியோ காணொளிகளை வெளியிட்டது உண்மையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா என்பதை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
அதேபோல பெரியவர்கள் குழந்தைகளின் வற்புறுத்தலை காரணம் காட்டி ஒரு முடிவை எடுத்தால், அது அவர்களின் சொந்த விருப்பத்தின் வெளிப்பாடேயன்றி, அவர்களின் சுதந்திரமான விருப்பத்தை, உரிமையை முறியடிக்கும் செயல் அல்ல. இந்த தேர்தல் வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மை என வைத்துக் கொண்டாலும், அதை ஊழல் நடைமுறை என கருத்தில் கொள்ள முடியாது.
அதிகபட்சமாக வீட்டில் உள்ள பெரியவர்களை குறிப்பிட்ட அந்தக்கட்சிக்கும், வேட்பாளருக்கும் வாக்களிக்க சம்மதிக்க வைக்க நடந்த ஒரு முயற்சியாகவே பார்க்க முடியுமேயன்றி, அதை குழந்தைகள் ஆதிக்கம் செலுத்திய செயலாக கருத முடியாது.
அதேநேரம் குழந்தைகளிடம் மொபைல் போன்களோ, வீடியோ காணொளிகளை உருவாக்கும் திறனோ இல்லை. வீட்டில் உள்ள பெரியவர்கள் தான் குழந்தைகளை பயன்படுத்தி இதுபோன்ற காணொளிகளை மக்களிடம் பரப்பியுள்ளனர். குழந்தைகளை இத்தகைய செயல்களில் ஈடுபடுத்துவது அருவருப்பானது, மலிவான அரசியல் உள்நோக்கம் கொண்டது, ரசனை குறைந்தது மட்டுமின்றி பெற்றோர் மற்றும் ஒரு கட்சி மீது மோகம் கொண்ட இளைஞர்களின் மோசமான, பொறுப்பற்ற தன்மையையே காட்டுகிறது.
குழந்தைகளை பயன்படுத்தி தேர்தல் பிரசாரத்தி்ல் ஈடுபடுவது தொடர்பாக தேசமும், நாடாளுமன்றமும் விரிவாக விவாதம் நடத்தி, இதுபோன்ற செயல் களை தடை செய்ய செய்ய வேண்டுமா அல்லது தேர்தல் வெற்றியை ரத்து செய்ய அதை ஒரு காரணமாக கருத முடியுமா என்பது குறித்து முடிவு எடுக்க வேண்டும். ஏனெனில் இதுபோன்ற காரணங்கள் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்கீழ் தேர்தலை செல்லாது என அறிவிக்க போதுமான ஒன்றாக இருக்காது.
இந்த வழக்கில் முதல்வர் விஜய் குழந்தைகளிடம் வேண்டுகோள் விடுத்ததாகக் கூறப்படும் செயலையும், அதன் தொடர்ச்சியாக குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் வற்புறுத்தியதாகக் கூறப்படும் செயல்களையும் மட்டும் வைத்து, வாக்காளர்களின் சுதந்திரமான முடிவெடுக்கும் உரிமை பறிக்கப்பட்டதாக கூற முடியாது எனக்கூறி இந்தத் தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.