தமிழகம்

ஆர்மீனியன், தம்புச்செட்டி தெருக்களில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நிரந்தர தீர்வு: அதிகாரிகளுக்கு ஐகோர்ட் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை உயர் நீதி​மன்​றம் எதிரே உள்ள ஆர்​மீனியன் தெரு மற்​றும் தம்பு செட்டி தெரு​வில் நில​வும் போக்​கு​வரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காணும் வகை​யில், போக்​கு​வரத்து போலீ​ஸாரும், மாநக​ராட்சி அதி​காரி​களும் இணைந்து நடவடிக்கை எடுக்க, உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்​தர​விட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக, உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​கறிஞர் எஸ்​.நட​ராஜன் தாக்​கல் செய்​திருந்த பொதுநல மனு: சென்னை உயர் நீதி​மன்​றத்​துக்கு எதிரே உள்ள தம்பு செட்டி தெரு, ஆர்​மீனியன் தெரு எனப்​படும் அரண்​மனைக்​காரன் தெரு உள்​ளிட்ட பகு​தி​களில் ஏராள​மான வழக்​கறிஞர்​களின் அலு​வல​கங்​கள் உள்​ளன. குறிப்​பாக, ஆர்​மீனியன் தெரு​வில் புனித அந்​தோணி​யார் தேவால​யம், கோயில்​கள், தனி​யார் பள்​ளி​கள், ஓட்​டல்​கள் என வணிக நிறு​வனங்​கள் அதி​க​மாக இயங்கி வரு​கின்​றன.

இதே​போல, தம்​புசெட்​டித் தெரு​வில் வங்​கி​கள் உள்​ளிட்ட வணிக நிறு​வனங்​கள் இயங்கி வரு​கின்​றன. ஆர்​மீனியன் தெரு​வில் உள்ள புனித அந்​தோணி​யார் தேவால​யத்​துக்கு தின​மும் ஏராள​மான பக்​தர்​கள் வந்து செல்​கின்​றனர்.

அதே​போல, இப்​பகு​தி​யில் உள்ள பள்​ளி​யில் சுமார் ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மாணவ, மாண​வியர் பயின்று வரு​வ​தால் தின​மும் காலை முதல் மாலை வரை இப்​பகு​தி​களில் கடும் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​படு​கிறது.

முறை​யான திட்​ட​மிடல் இல்​லாத​தால் பொது​மக்​கள் நடந்து செல்​வதற்கு கூட வழி​யின்றி நெரிசல் குறை​யும் வரை காத்​திருக்க வேண்​டி​யுள்​ளது. அவசர நேரங்​களில் இந்த இரு தெருக்​களி​லும் ஆம்​புலன்ஸ் உள்​ளிட்ட எந்த வாக​ன​மும் செல்ல முடி​யாத அளவுக்கு சாலை​யின் இரு​புறங்​களி​லும் வாக​னங்​கள் நிறுத்தி வைக்​கப்​பட்​டுள்​ளன.

எனவே, இந்த இரு சாலைகளில் ஏற்​படும் போக்​கு​வரத்து நெரிசலுக்கு தீர்வு காணக்​கோரி ஏற்​க​னவே, சென்னை மாநகர காவல் ஆணை​யர் மற்​றும் பூக்​கடை உதவி ஆணை​யர், காவல் ஆய்​வாளர் மற்​றும் போக்​கு​வரத்து போலீ​ஸாருக்கு கடந்​தாண்டு ஆக.7 அன்று புகார் அளித்​தும் எந்த நடவடிக்​கை​யும் எடுக்​கப்​பட​வில்லை இவ்​வாறு மனு​வில் குறிப்​பிட்​டிருந்​தார்.

இந்த பொதுநல மனு மீதான விசா​ரணை தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி மற்​றும் நீதிபதி ஜி. அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வில் நடந்​தது. அப்​போது, மனு​தா​ரர் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் ஆர். பவித்​ரா, இந்த இரு தெருக்​களி​லும் பீக்​-அவர்ஸ் நேரங்​களில் நெரிசல் இன்​னும் அதி​க​மாகி விடு​கிறது. இதனால் அவசர நேரங்​களில் வழக்​கறிஞர்​களும், பொது​மக்​களும் கடுமை​யான சிரமத்​துக்​குள்​ளாகி வரு​வ​தாக தெரி​வித்​தார்.

அதையடுத்து நீதிப​தி​கள், ‘‘ஆர்​மீனியன் தெரு, தம்​புச்​செட்டித் தெரு உள்​ளிட்ட பாரி​முனை பகு​தி​யில் நில​வும் போக்​கு​வரத்து நெரிசலுக்கு தீர்வு காணக்​கோரி, கடந்த 2019-ம் ஆண்டு வழக்​கறிஞர் பி. ஜேசு​பாலன் ராஜா என்​பவர் வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

அந்த வழக்​கில், இப்​பகு​தி​களில் நில​வும் போக்​கு​வரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண போக்​கு​வரத்து போலீ​ஸாரும், மாநக​ராட்சி அதி​காரி​களும் கூட்​டாக ஆய்வு மேற்​கொண்டு தகுந்த சீரமைப்பு நடவடிக்​கைகளை மேற்​கொள்ள வேண்​டுமென கடந்த 2024-ம் ஆண்டு உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

இந்த பொதுநல மனு​வின் மூல​மாக உயர் நீதி​மன்​றம் பிறப்​பித்த அந்த உத்​தரவை அதி​காரி​கள் இன்​னும் அமல்​படுத்​த​வில்லை என்​பது கண்​கூ​டாகத் தெரி​கிறது. எனவே, இந்த விவ​காரத்​தில் போலீ​ஸாரும், மாநக​ராட்சி அதி​காரி​களும் இணைந்து இந்த பிரச்​சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்​டும். குறிப்​பாக, இப்​பகு​தி​களில் எங்​கும் போக்​கு​வரத்​து நெரிசல்​ இல்​லாத சூழலை உரு​வாக்​க வேண்​டும்​” என, உத்​தர​விட்​டனர்​.

SCROLL FOR NEXT