

சென்னை: வாரியத் தலைவர் பதவி வாங்கித் தருவதாக தவெக வட்ட செயலாளரிடம் ரூ.20 லட்சம் பேரம் பேசிய நபர் ஹரியாணாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் ரோகன். தவெக-வில் வட்டச் செயலாளராக உள்ளார். இவர் அடிக்கடி தவெக தலைமை அலுவலகத்துக்கு சென்று வருவார்.
அப்போது ஜாய் என்பவர் அறிமுகமாகி உள்ளார். தான் டெல்லியில் இருப்பதாகவும், தனக்கு விஜய் மிகவும் நெருங்கிய நண்பர் என்றும் ரோகனிடம் ஜாய் தெரிவித்துள்ளார்.
நான் நினைத்தால் ஏதாவது ஒரு வாரியத்தில் தலைவர் பதவி வாங்கித் தர முடியும் என தெரிவித்துள்ளார். இதற்கு ரூ.20 லட்சம் தர வேண்டும் என கூறியுள்ளார்.
இதற்கு சம்மதம் தெரிவித்த ரோகனுக்கு, திடீரென ஜாய் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரைப் பற்றி விசாரித்தபோது, அவருக்கும் தவெக-வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரியவந்தது.
போலீஸார் விசாரணை
இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து மெரினா காவல் நிலையத்தில் ரோகன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து ஹரியாணாவில் தலை மறைவாக இருந்த ஜாயை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.