நடுத்திட்டு மற்றும் தேன்மதுரை கிராமங்களில் இருந்துஅம்மாப்பேட்டையிலுள்ள பள்ளிகளுக்கு செல்ல பரிசல்களில் ஆற்றை கடக்கும் மாணவர்கள்.

 

படங்கள்: எஸ்.செந்தில்

தமிழகம்

அரூர் அருகே தென்பெண்ணை ஆற்றின் நடுவே தீவு போல் அமைந்துள்ள 2 குக்கிராமங்கள்

அடிப்படை வசதிகளுக்காக பல ஆண்டுகளாக ஏங்கும் மக்கள்

எஸ்.செந்தில்

அரூர்: அரூர் அருகே தென்பெண்ணை ஆற்றின் நடுவே தீவு போல் அமைந்துள்ள 2 குக்கிராமங் களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் வேடகட்டமடுவு ஊராட்சிக்கு உட்பட்ட நடுத்திட்டு மற்றும் தேன்மதுரை ஆகிய குக்கிராமங்களில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங் களைச் சார்ந்த 150-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இவர்கள் பெரும்பாலும் இருளர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்கள். நாடு சுதந்திரம் பெற்று 79 ஆண்டுகளைக் கடந்தும் இன்னும் அடிப்படை வசதிகளுக்காக போராடிக் கொண்டிருக்கின்றனர்.

தென்பெண்ணையாற்றில் இரு கிளைகளாக பிரிந்து வரும் ஆறுகளுக்கு நடுவில் இக்கிராமங்கள் அமைந்துள்ளன. வெள்ளப்பெருக்கு காலங்களில் வெளி உலகத்தில் இருந்து துண்டிக்கப்பட்ட தீவு போல மாறிவிடுகிறன.

சுமார் 600 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இப்பகுதியில் மக்கள் தங்களது அன்றாட தேவைக்கும், மருத்துவம், கல்வி உள்ளிட்டவற்றிற்கும் பரிசல் மூலமாகவும், நீந்தியும் ஆற்றை கடந்து செல்ல வேண்டியுள்ளது.

கிருஷ்ணகிரி அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது கிராம மக்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் நிலை உள்ளது.

இதுபோன்ற காலங்களில் ஆபத்துகளில் சிக்கும் மக்கள் உரிய சிகிச்சை பெற வெளியே செல்ல முடியாமல் உயிரிழப்புகளையும் சந்தித்துள்ளனர். போதிய வருவாய் இல்லாத நிலையில், பெரும்பாலான ஆண்கள் கூலி வேலைக்காக வெளியில் சென்று விடும் நிலையில் இங்குள்ள முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

அம்மாப்பேட்டை அரசுப் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மழைக்காலங்களில் பரிசல் மற்றும் படகு மூலமாக ஆற்றைக் கடந்து செல்கின்றனர். சில நேரங்களில் 5 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து பள்ளிக்குச் செல்ல வேண்டிய சூழலும் உள்ளது.

கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி குழந்தைகள் பாதுகாப்பாக பள்ளியை அடைய தேவையான வசதிகளை அரசு ஏற்படுத்த வேண்டும். ஆனால் இந்த அடிப்படை உரிமை கூட இக்குழந்தைகளுக்கு கிடைக்கவில்லை.

கிராமத்துக்கு பாலம் அமைத்து தரக்கோரி பல ஆண்டுகளாக மக்கள் போராடி வருகின்றனர். அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தும் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்திய நடுத்திட்டு மற்றும் தேன்மதுரை கிராம மக்கள்.

மொத்தமுள்ள 600 ஏக்கர் பரப்பளவில் 400 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களில் நிலக்கடலை, கரும்பு, மஞ்சள், நெல் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இருப்பினும் நிலங்களின் வகைப்பாடு தெளிவுபடுத்தப்படாததால் பட்டா வழங்கப்படவில்லை. பட்டா இல்லாத காரணத்தால் மின் இணைப்பு வழங்க மின்வாரியம் மறுத்து வருகிறது.

இதனால் டீசல் இயந்திரங்களைக் கொண்டு நீர் இறைத்து விவசாயம் செய்து வருகின்றனர். பலகட்ட போராட்டங்களுக்கு பின்னர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தான் இங்குள்ள வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

வளர்ச்சியடைந்த இக்காலத் திலும் 50 ஆண்டுகள் பின்தங்கிய நிலையில் உள்ள தங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து மாலா, குமார் உள்ளிட்ட பொதுமக்கள் கூறியதாவது: நடுத்திட்டு, தேன்மதுரை கிராமங்களுக்கு செல்ல தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே வாய்ப்புள்ள இடத்தை ஆய்வு செய்து பாலம் அமைக்க வேண்டும்.

இப்பகுதியில் உள்ள நில அளவை மற்றும் வகைப்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்கொண்டு, தகுதியான குடும்பங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாய கிணறுகளுக்கு மின் இணைப்பு வழங்க சிறப்பு தளர்வு ஏற்படுத்த வேண்டும். குடிநீருக்காக ஆற்று நீரை பயன்படுத்தினால் நோய்கள் தாக்கும் நிலையில் இரு இடங்களில் வேடகட்டமடுவு ஊராட்சி சார்பில் கைப்பம்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு மினிதண்ணீர் தொட்டிகள் அமைத்து அதன் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி கிடைக்க செய்ய வேண்டும்.

பள்ளி மாணவர்களின் பாதுகாப்பான போக்கு வரத்துக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். அவசர மருத்துவ சேவைகள் எளிதில் கிடைக்கும் வகையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம் படுத்த வேண்டும்.இப்பகுதியில் உள்ள இருளர் இனமக்கள் அனைவருக்கும் சாதிச்சான்று வழங்க வேண்டும், என்றனர்.

SCROLL FOR NEXT