அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு, சென்னை தி.நகரில் உள்ள நகைக் கடையில் நகைகள் வாங்க குவிந்த வாடிக்கையாளர்கள் கூட்டம்.படம்: எஸ்.சத்தியசீலன்
சென்னை: அட்சய திருதியை ஒட்டி, நகைக்கடைகளில் பொதுமக்கள் குவிந்தனர். பெரும்பாலோர் எடை குறைவான தங்க ஆபரணங்கள், நாணயங்களை வாங்க ஆர்வம் காட்டினர்.
அட்சய திருதியை நாளில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் வாங்குவது பொதுமக்களின் வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டுக்கான அட்சய திருதியை நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் நகைக் கடைகளில் பொதுமக்கள் குவிந்தனர்.
சென்னையில் தி. நகர், புரசைவாக்கம், பாரிமுனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகளில் காலை முதலே மக்கள் ஆர்வமாக நகைகளை வாங்கினர். இது குறித்து, நகை வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: அட்சய திருதியை கொண்டாட்டத்தையொட்டி, தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் நகைக் கடைகள் காலை 8 மணிக்கே திறக்கப்பட்டன. தியாகராய நகரில் உள்ள நகைக் கடைகளில் வழக்கமான மக்கள் கூட்டம் காணப்பட்டது.
அதேநேரத்தில், எடை குறைந்த ஆபரணங்கள், நாணயங்களை அதிக அளவில் வாங்கினர். இருப்பினும், கடந்த ஆண்டை விட மக்கள் வருகை சற்று குறைவாக இருந்தது. இதற்கு காரணம். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தான். தேர்தல் விதிமுறைகள் காரணமாக, பணத்தை எடுத்து வரமுடியாது என்ற பயம் இருக்கிறது. இரண்டு நாள் அட்சய திருதியை இருப்பதால், திங்கள்கிழமையும் நகைகளை வாங்க வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.