தமிழகம்

தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த பணம், நகைகளை மீட்க முடியாமல் மக்கள் தவிப்பு

ஒய்.டேவிட் ராஜா

மதுரை: மதுரை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் பறி முதல் செய்த பணம் மற்றும் பொருட்களை மீட்க போதிய விழிப்புணர்வு இன்றி பொது மக்கள் திண்டாடி வருகின்றனர்.

தமிழகத்தில் ஏப்.23-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடை பெற உள்ளது. தற்போது தேர்தல் நடத்தை விதிகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனால், மதுரை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் 24 மணி நேரமும் தீவிர வாகனச்சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணமின்றி ரொக்கமாக பணம் எடுத்துச் செல்லவும், ரூ.2 லட்சத்துக்கு அதிகமான மதிப்புள்ள நகையை எடுத்துச் செல்லவும் அனுமதி இல்லை.

          

மாவட்டத்தில் இதுவரை ரூ.1 கோடிக்கும் அதிகமான ரொக்கம், ரூ.60 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இதில், மருத்துவமனைக்கு செல்வோர், திருமணம், காதணி விழா வீட்டார், வியாபாரிகள் உள்ளிட்டோர் அதிக அளவு சிக்கியுள்ளனர். இவர்கள், தங்கள் பொருட்களை திரும்பப் பெற என்ன செய்வதென்று தெரியாமல் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியரு மான பிரவீன்குமார் கூறுகையில், பொதுமக்களிடம் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி பறிமுதல் செய்யப்பட்ட பணம், நகைகளை விரைவில் அவர்கள் மீட்டுக் கொள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தலைமையில் அதிகாரிகள் அடங்கிய மாவட்டக் குறை தீர்க்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு ஆட்சியர் அலுவலக புதிய கட்டிடத்தில் உள்ள தரைதளத்தில் இயங்கி வருகிறது.

இந்தக் குழுவில், பாதிக்கப்பட்டவர்கள் வங்கிப் பணம் எடுத்த ரசீது, ஜிஎஸ்டி ரசீது, திருமணச் செலவு எனில் திருமண அழைப்பிதழ், சொத்து விவகாரம் எனில் ஒப்பந்தப் பத்திரம், மருத்துவச் செலவுகளுக்காக எடுத்துச் சென்ற பணத்தை திரும்ப பெற, மருத்துவமனையின் அனுமதி ரசீது, மருத்துவரின் பரிந்துரை சீட்டு, பரிசோதனை அறிக்கை, நோயாளியின் தகவல், பணம் எதற்காக எடுக்கப் பட்டது என்ற விளக்க கடிதம் போன்ற ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

அவர்கள் மனுதாரரிடம் உரிய விசாரணை மேற்கொண்டு, ஆவணங்களை சரிபார்த்து பணம், நகைகளை விடுவிக்கும் அனுமதியை அளிப்பர். அந்த அனுமதி கடிதம் மூலம் கருவூலத்தில் இருந்து பணம், நகைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என அவர் கூறினார்.

SCROLL FOR NEXT