

புதுடெல்லி: அமெரிக்கப் போரினால் பாதிக்கப்பட்ட ஈரானுக்கு, காஷ்மீரிகள் பணம், தங்கம் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை, டெல்லியிலுள்ள ஈரான் தூதரகம் வழியாக நன்கொடையாக அனுப்பி வைத்துள்ளனர்.
போரினால் பாதிக்கப்பட்ட ஈரானிய மக்களுக்கு உதவ காஷ்மீரில் ஒரு மாபெரும் நன்கொடை திரட்டும் இயக்கம் துவங்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் சனிக்கிழமை முடிந்த ரம்ஜான் பண்டிகைக்கு மறுநாள் முதல் இது வேகம் பெற்றுள்ளது.
இந்த நன்கொடை திரட்டும் இயக்கத்தில், மக்கள் பணம் மட்டுமல்லாமல், தங்க நகைகள், கால்நடைகள் மற்றும் பாரம்பரிய செப்புப் பாத்திரங்களையும் நன்கொடையாக வழங்குகின்றனர்.
இந்தத் தன்னார்வப் பணியில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்று வருகின்றனர். ஜம்மு காஷ்மீரில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் புட்காம், பாரமுல்லா உள்ளிட்ட மாவட்டங்களில் நன்கொடை திரட்டும் பணி அதிகம் நடக்கிறது.
ஈரான் நாட்டில் ஷியா சமூகத்தினர் அதிகம் வசிப்பதே இதற்குக் காரணம். குழந்தைகள் கூடத் தங்கள் பங்கிற்குத் தாங்கள் சேமித்து வைத்திருந்த பணத்தையும், ஈத் பண்டிகையின்போது கிடைத்த அன்பளிப்புப் பணத்தையும் நன்கொடையாக அளித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த மனிநேயச் செயலுக்காக, இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் நன்றி தெரிவித்துள்ளது. திரட்டப்பட்ட நன்கொடைகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தமது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஈரான் தூதரகம், ‘ஈரானிய மக்களுக்கு மனிதநேய ஆதரவை அளித்து துணை நின்ற காஷ்மீரின் கனிவான மக்களுக்கு நன்றியால் நிரம்பிய இதயங்களுடன் நாங்கள் மனதார நன்றி கூறுகிறோம். நன்னயத்தையும் மனிதநேயத்தையும் நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம். நன்றி, இந்தியா.’ எனக் குறிப்பிட்டுள்ளது.
அதிகமாகப் பெண்கள் உயிரிழந்த ஈரானியப் பள்ளிக்கு தனது ஒரு மாத ஊதியத்த நன்கொடையாக அளிப்பதாக காஷ்மீரின் சுயேச்சை எம்பியான ரஷீத் ஷேக் அறிவித்துள்ளார். இது குறித்து மக்களவையில் பேசிய ரஷீத் ஷேக், ‘தவறான கொள்கைகளால் இறந்துகொண்டிருக்கும் இஸ்ரேலின் சாதாரண குடிமக்களுக்குத் எனது இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன். ஈரானுக்கு உதவுவதற்காக கோடிக்கணக்கில் பணம் திரட்டிய காஷ்மீர் மக்களை பாராட்டுகிறேன். எம்பிக்கான எனது ஒரு மாத அரசு ஊதியத்தை 62 மாணவிகள் உயிரிழந்த ஈரானியப் பள்ளிக்கு அனுப்ப உள்ளேன்.’ எனத் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லாவை சேர்ந்தவர் சுயேச்சை எம்.பி.யான அப்துல் ரஷீத் ஷேக். பொறியாளரான இவர், உபா சட்டத்தில் கைதாகி சிறையில் உள்ளார். இவர் காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு உதவியதாகப் புகார்கள் உள்ளன. சிறையிலிருந்தபடி மக்களவை தேர்தலில் வென்ற ரஷீத், நீதிமன்ற அனுமதியுடன் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டு வருகிறார். நேற்று நாடாளுமன்ற மக்களவையின் பொது பட்ஜெட் விவாதத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார்.