தமிழகம்

கோவை பெரியார் அறிவுலகத்துக்கு 2 நாள் அரசு விடுமுறை: குழந்தைகள், பெற்றோர் ஏமாற்றம்

இரா.கார்த்திகேயன்

கோவை: முதல்வர் விஜய்யால் அன்மையில் திறந்துவைக்கப்பட்ட பெரியார் அறிவுலகத்துக்கு அரசு விடுமுறை நாட்களில் விடுப்பு அளிக்கப்படுவதால் குழந்தைகள் மற்றும் பெற்றோர் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

கோவையில் கடந்த திமுக ஆட்சியில் 1 லட்சத்து 98 ஆயிரம் சதுர அடியில் ரூ.300 கோடியில் கட்டப்பட்டு, தற்போதைய முதல்வர் விஜய்யால் கடந்த 16-ம் தேதி திறக்கப்பட்டுள்ளது. பெரியார் அறிவுலகம். இன்றைக்கு கோவையின் மற்றுமொரு அடையாளமாக மாறி உள்ளது. அதாவது கோவை செம்மொழிப் பூங்கா வளாகத்தை ஒட்டி உள்ள இந்த நூலகம் மற்றும் அறிவியல் மையமானது குழந்தைகளின் அறிவியல் தேடலுக்கும், சிந்தனைகளுக்கும் வளர்ச்சி தரும் ஒரு மையமாக மாறி உள்ளது.

இங்குள்ள விண்வெளி தொடர்பான கருவிகள், இயந்திரங்கள், பூமி, செவ்வாய், புதன் உள்ளிட்ட ஒவ்வொரு கோள்களிலும் தனி மனிதரின் எடை எவ்வளவு இருக்கும் என்பது தொடங்கி விண்வெளி வீரர்கள் அணியும் உடை, தமிழரின் தொன்மையை பறைசாற்றும் காலச்சுவடாக இன்றைக்கு தொல்லியல் ஆய்வு நடந்து கொண்டிருக்கும் கீழடியில் கண்டறியப்பட்ட பொருட்களின் மாதிரி மற்றும் அமர்ந்து படிக்கும் வசதியுடன் கூடிய பிரம்மாண்ட நூலகம் என அனைத்தும் ஒற்றைக்குடையின் கீழ் இந்த அறிவுலகத்தில் அங்கமாகி இருக்கின்றன.

இந்நிலையில் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி விடுமுறை நாட்கள் தொடர் விடுமுறை என 4 நாட்களில் அதிகளவில் பொதுமக்கள் பார்வையிட வருவார்கள். ஆனால் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமியை ஒட்டி விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனை அறியாமல் குழந்தைகள் மற்றும் பெற்றோர் பலர் நேரில் வந்து பூட்டியிருப்பதை கண்டு ஏமாற்றுத்துடன் திரும்பினர்.

இது தொடர்பாக பொதுமக்கள் கூறியதாவது: நூலகங்கள் விடுமுறை நாட்களில் செயல்பட வேண்டும். அப்போது தான் மாணவர்கள் வந்து செல்ல ஏதுவாக இருக்கும். அரசு அலுவலகம் போல் பூட்டி வைத்தால், நிச்சயம் பெரிய அளவில் யாரும் வர வாய்ப்பிருக்காது. ஞாயிறு உள்ளிட்ட வார விடுமுறை நாட்களிலும் நிச்சயம் பெரியார் அறிவுலகம் திறக்கப்பட வேண்டும். அப்படி திறந்தால் மட்டும் திட்டத்தின் நோக்கம் நிறைவேறும். இல்லையென்றால் வெறுமனே அலுவலகம் போல் இயங்கினால், குழந்தைகளிடமும் ஆர்வமும் குறையும்.” இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அறிவியல் தொடர்பாளரும், நூலகர் வாசகர் வட்ட தலைவருமான க.லெனின் பாரதி கூறும்போது, “அறிவியல் மையங்களும் நூலகங்களும் விடுமுறை நாட்களிலும் தொடர்ந்து இயங்க வேண்டும். அறிவுக்கும், அறிவியல் சிந்தனைக்கும் விடுமுறை கிடையாது. அறிவியல் மையங்களும், நூலகங்களும் மக்களின் அறிவை வளர்க்கவும், மாணவர்களின் திறன்களை மேம்படுத்தவும், அறிவியல் மனப்பான்மையை உருவாக்கவும் உதவும் முக்கியமான பொதுக் கல்வி நிறுவனங்களாகும். வாரத்தின் அனைத்து நாட்களிலும் இவை இயங்க வேண்டும்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் அறிவியல் கோட்பாடுகளை நேரடியாக செயல் விளக்கங்கள், பரிசோதனைகள் மற்றும் அறிவியல் காட்சிப் பொருட்கள் மூலம் புரிந்துகொள்ள அறிவியல் மையங்கள் உதவுகின்றன. விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் வரும் மாணவர்களுக்கும் அறிவியலை அனுபவித்து அறிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கிறது. இந்த அனுபவம் மாணவர்களின் சிந்தனைத் திறனையும் படைப்பாற்றலையும் மேம்படுத்துகிறது. கல்வி என்பது பள்ளி அல்லது கல்லூரியுடன் முடிவடைவதில்லை.

தொடர்ச்சியாக இயங்கும் நூலகங்கள் குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடம் வாசிப்புப் பழக்கத்தை உருவாக்குகின்றன. இது மொழித் திறன், சிந்தனைத் திறன் மற்றும் படைப்பாற்றலை மேம்படுத்துகிறது. அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விடுமுறையில் இருக்கும்போது, பல மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் தங்களின் ஓய்வு நேரத்தைப் பயனுள்ளதாகச் செலவிட வாய்ப்பு கிடைக்கிறது.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT