சென்னை வடபழனி முருகன் கோயிலை சுற்றியுள்ள பகுதி சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பக்தர்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். | படம்: எஸ்.சத்தியசீலன் |

 
தமிழகம்

வடபழனி முருகன் கோயிலை சுற்றியுள்ள தெருக்களில் நிறுத்தப்படும் வாகனங்களால் மக்கள் கடும் அவதி

செய்திப்பிரிவு

சென்னை: வடபழனி முரு​கன் கோயிலை சுற்​றி​யுள்ள தெருக்​களில் நிறுத்​தப்​படும் வாக​னங்​களால் பக்​தர்​களும் பொது​மக்​களும் கடும் அவதிக்​குள்​ளாகி வரு​கின்​றனர்.

சென்னை மாநகரின் மிக முக்​கிய​மான ஆன்​மிக அடை​யாளங்​களில் ஒன்​றாக திகழ்​வது வடபழனி முரு​கன் கோயில். நாள்​தோறும் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் இங்கு வந்து தரிசனம் செய்​கின்​றனர்.

          

குறிப்​பாக, செவ்​வாய்க்​கிழமை, வார இறுதி நாட்​கள் மற்​றும் விசேஷ காலங்​களில் பக்​தர்​களின் வருகை பல மடங்கு அதி​கரித்​து, மாட வீதி​களில் கூட்​டம் அலைமோதுகிறது.

கோயிலுக்கு வரும் பக்​தர்​கள் ஆற்​காடு சாலை வழி​யாக ஆண்​ட​வர் தெரு​வை​யும், நூறடி சாலை வழி​யாக அம்​மன் கோயில் தெரு மற்​றும் வடக்கு மாட வீதி​யை​யும் பிர​தான வழிகளாக பயன்​படுத்​துகின்​றனர்.

ஆனால், சமீப​கால​மாக இந்​தப் பகு​தி​களில் திட்​ட​மிடப்​ப​டாத வாகன நிறுத்​தம் மற்​றும் ஆக்​கிரமிப்​பு​கள் அதி​கரித்​துள்​ள​தால் பக்​தர்​கள் கடும் சிரமத்​துக்கு உள்​ளாகின்​றனர். கோயில் நிர்​வாகம் சார்​பில் நூறடி சாலை அருகே கார் நிறுத்​து​மிட​மும், ஆண்​ட​வர் தெரு​வில் இருசக்கர வாகன நிறுத்​து​மிட​மும் ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளன.

இருப்​பினும், பல வாகன ஓட்​டிகள் விதி​களுக்​குப் புறம்​பாக அம்​மன் கோயில் தெரு, ஆண்​ட​வர் தெரு மற்​றும் மாட வீதி​களி​லேயே தங்​களது வாக​னங்​களை நிறுத்​திச் செல்​கின்​றனர்.

இப்​பகு​தி​யில் உள்ள கடைகளுக்கு வரும் வாடிக்​கை​யாளர்​களும் தங்​களது வாக​னங்​களை சாலைகளின் குறுக்கே ஆங்​காங்கே நிறுத்​தி​விடு​கின்​றனர். இதனால், கோயில் நுழை​வா​யிலுக்கு செல்​லும் பக்​தர்​கள் விபத்து அச்​சத்​துடனேயே நடக்க வேண்​டிய சூழல் நில​வு​கிறது.

மேலும், நடை​பாதைகளை ஆக்​கிரமித்து வைக்​கப்​பட்​டுள்ள கடைகளால் பக்​தர்​கள் சாலை​யில்​தான் செல்ல வேண்​டி​யுள்​ளது.

குறுகலான மாட வீதி​களில் கார்​கள் மற்​றும் பைக்​கு​கள் அணிவகுத்து நிற்​ப​தால், மற்ற வாக​னங்​கள் கடந்து செல்ல முடி​யாமல் மணிக்​கணக்​கில் போக்​கு​வரத்து நெரிசல் ஏற்​படு​கிறது.

தரிசனத்​துக்​காக நீண்ட வரிசை​யில் காத்​திருந்து வரும் பக்​தர்​கள், கோயிலுக்கு வெளி​யே​யும் இத்​தகைய நெரிசலில் சிக்​கித் தவிப்​பது பெரும் மன உளைச்​சலை தரு​கிறது. எனவே, சென்னை மாநக​ராட்​சி, போக்​கு​வரத்து காவல்​துறை உள்​ளிட்ட துறை​கள் ஒருங்​கிணைந்து செயல்பட வேண்​டும் என பொது​மக்​கள் வலி​யுறுத்​துகின்​றனர்.

மாட வீதி​கள் மற்​றும் தெருக்​களில் உள்ள ஆக்​கிரமிப்பு கடைகளை அகற்​று​வதோடு, விதி​களை மீறி நிறுத்​தப்​படும் வாக​னங்​களின் உரிமயைாளர்​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்​டும். பக்​தர்​களுக்கு பாது​காப்​பான தரிசனத்தை உறுதி செய்ய வேண்​டும் என்​பதே அனை​வரின் எதிர்​பார்ப்​பாக உள்​ளது.

SCROLL FOR NEXT