சென்னை: அரசு ஊழியர்களின் ஓய்வூதிய விண்ணப்பங்களை நவம்பர் மாதம் முதல் இணைய வழியில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு பெறப்படும் காகித விண்ணப்பங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று கருவூலக் கணக்குத் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கருவூலக் கணக்குத் துறை இயக்குநர் டி.சாரு, துறைசார்ந்த அனைத்து அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: முன்னர் அனுப்பப்பட்ட காகித வடிவிலான சில ஓய்வூதிய விண்ணப்பங்கள், அவற்றுக்கான இணைய வழி விண்ணப்பங்கள் பெறப்படுவதற்கு முன்பே தீர்க்கப்பட்டு விட்டதாக தமிழ்நாடு முதன்மைக் கணக்காயர் அலுவலகம் அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், ஓய்வூதிய வழக்குகளைச் செயல்படுத்துவதில் முரண்பாடுகள் ஏற்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, ஓய்வூதிய விண்ணப்பங்களை விரைவாக செயல்படுத்த நவம்பர் முதல் அனைத்துவிண்ணப்பங்களும் இணையவழி ஓய்வூதிய மற்றும் வருங்கால வைப்புநிதி அங்கீகார அமைப்பு (OPPAS) மூலமாக மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன் பிறகு பெறப்படும் காகித விண்ணப்பங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உடனே திருப்பி அனுப்பப்படும். திருத்திய ஓய்வூதிய விண்ணப்பங்களையும் இணைய வழியில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். தேவையான அனைத்து சான்றுகளும் உரிய முறையில் இணைக்கப்பட வேண்டும்.
ஓய்வூதியப் பலன்கள் உரிய காலத்தில் வழங்கப்படுவதை உறுதிசெய்ய, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து சம்பள அலுவலர்களுக்கும் இந்த அறிவுறுத்தல்களை தெரிவித்து, அவை கண்டிப்பாகப் பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.