சென்னை: பெரு நிறுவனங்கள் தங்களது வளாகத்தை அதிகளவு மழைநீர் தேங்கும் வகையில் அலட்சியமாக வைத்திருந்தால், ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை மாநகராட்சி சார்பில் வடபழனி, கெங்கையம்மன் கோயில் தெருவில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமை சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று டெங்கு தடுப்பு நடவடிக்கைகளையும் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களை வழங்கினார்.
பின்னர், அவர் கூறியதாவது: டெங்கு தடுப்பு நடவடிக்கையின் முக்கிய பகுதியாக கொசுப்புழு உற்பத்தியாகும் இடங்களை அழிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் கண்டிப்பாக அவசியம். அனைவரும் தங்கள் வீட்டுக்குள்ளும், வீட்டைச் சுற்றிலும், குறிப்பாக மொட்டை மாடியிலும் சென்று பாருங்கள். தேவையற்ற பாத்திரங்கள், சிறிய தொட்டிகள், மூடி, ஆட்டுக்கல், பயன்படுத்தாத பூந்தொட்டிகள் என எதுவாக இருந்தாலும், மழைநீர் தேங்கக் கூடிய வாய்ப்புள்ளவற்றை அப்புறப்படுத்துங்கள்.
பெரிய நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் பெரு நிறுவன அமைப்புகள் தங்கள் வளாகங்களை மழைநீர் தேங்கும் வகையில் அலட்சியமாக வைத்திருந்தால் உடனடியாக ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். மீண்டும் அது தொடர்ந்தால் கூடுதல் அபராதம் விதிக்கப்படும். சென்னை மாநகராட்சி சார்பில் கடந்த 2 மாதங்களில் மட்டும் ரூ.7.50 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. பலமுறை எச்சரித்தும் நடவடிக்கை எடுக்காத வீடுகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஜன.1 முதல் அக்.7-ம் தேதி வரை 21,655 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 301 பேர் டெங்கு பாதிப்பால் உள் நோயாளிகளாக சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் கொசு ஒழிப்புப் பணிகளுக்காக சென்னை மாநகராட்சியில் மட்டும் 3,700 கொசு ஒழிப்புப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன், துணை ஆணையர் (சுகாதாரம்) தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், மத்திய வட்டார துணை ஆணையர் எச்.ஆர்.கவுஷிக், பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு மருந்துத்துறை கூடுதல் இயக்குநர் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.